எண்ணூர் துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு முனையத்திலிருந்து திருவள்ளூர் வழியாக பெங்களூருக்கும் புதுச்சேரி நாகப்பட்டினம் மதுரை வாயிலாக தூத்துக்குடி வரையிலுமான 1446 கிலோமீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயு எடுத்து செல்வற்கான குழாய் அமைக்கும் பணியை இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு 6,025 கோடியாகும்.இந்த குழாயின் ஒரு பகுதியானது விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி தாலுகாவின் மண்டகப்பட்டு கிராமத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்கிறது. இந்த வழியில் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கிறது. இதற்காக ஊசுட்டேரியின் தமிழக எல்லையில் உள்ள 38.5 ஹெக்டேர் மற்றும் புதுச்சேரி எல்லையில் உள்ள 7.5 ஹெக்டேர் பரப்பளவு பகுதியை பயன்படுத்திக்கொள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் தேசிய வனவுயிர் வாரிய அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
விழுப்புரம், புதுச்சேரி எல்லையில்் அமைந்துள்ள ஊசுட்டேரியின் மொத்த பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர், இந்த ஏரியின் ஒட்டுமொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 15 சதுர கிலோமீட்டர் ஆகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணைக்கட்டிலிருந்து இந்த ஏரி நீரைப் பெறுகிறது. 2008ஆம் ஆண்டு இந்த ஏரியானது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து ஆண்டுதோறும் இங்கு பறவைகள் வருகின்றன, குளிர்காலத்தில் இங்கிருந்து கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செல்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காவும் உறைவிடத்திற்காகவும் இங்கு வந்து செல்வதால் புதுச்சேரியின் வேடந்தாங்கல் எனவும் இந்த உசுட்டேரி அழைக்கப்படுகின்றது.
ப்ளமிங்கோஸ், பெலிகன், டார்ட்டர், யுரேசியன் ஸ்பூன் பில் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வகை பறவைகள் ஒவ்வொரு பருவத்திலும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் எண்ணிக்கையில் இங்கு வருகின்றன.
Asian wetland Burea எனும் அமைப்பு வரையறுத்துள்ள ஆசியாவின் மிக முக்கியமான 115 சதுப்பு நிலங்களில் உசுட்டேரியும் ஒன்று. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் தேசிய சதுப்பு நில பாதிகாப்பு திட்டத்திலும் இந்த ஏரி இடம்பெற்றுள்ளது.
International Union for Conservation of Nature and Natural Resources அமைப்பும், Bombay History Society அமைப்பும் ஆசியாவில் மிகவும் முக்கியமான பறவைகள் வாழிடமாக ஊசுட்டேரியை அறிவித்துள்ளது.
சிறிய வகை மூலிகை செடியிலிருந்து பெரிய அளவிலான மரம் வரை 480 வகையான தாவரங்களும், 25 வகையான மீன்களும், மான், நரி, காட்டுபூனை உள்ளிட்ட 14 வகையான பாலூட்டி விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த ஊசுட்டேரி விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
சட்டவிரோத மீன்பிடித்தல், வேட்டையாடுதல், கடல் நீர் உட்புகுதல் ஆகியவற்றிலிருந்து இந்த ஏரியைக் காப்பாற்றும் வகையில் ஏரியை சுற்றி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கை வெளியிட்டது.
இப்படி ஒரு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஏரியின் மையப்பகுதியிலிருந்து மிக அருகிலேயே பூமியைத் தோண்டி இயற்கை எரிவாயு குழாய் அமைப்பதால் ஏரியின் இயல்பு நிலை பாதிக்கும் எனவும், ஒருவேளை குழாய் கசிவு விபத்து ஏற்பட்டால் இந்த சரணாலயத்தின் சூழல் சமநிலையே சீர்கெடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bird Sanctuary