தமிழகத்தில் கூடுதலாக
சென்னை,
திண்டுக்கல்,
நாமக்கல்,
தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிற மதங்களை சேர்ந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்படும் கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அமையும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்து மத சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கும் வழக்கறிஞர் வேல்முருகன், இந்து மத நிறுவனங்களில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பணிபுரிய வேண்டும் என்று இந்து மத சட்டம் தெரிவிப்பதாக கூறுகின்றார். இருப்பினும் கல்வி நிறுவனங்களில் இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டுமா என்பதில் ஒரு தெளிவில்லை என்று தெரிவிக்கிறார்.
கல்வி நிறுவனங்களில் அரசின் கீழ் இயங்கும் ஒரு துறை மத அடிப்படையில் மட்டுமே பணி வழங்க முடியும் என்று தெரிவிப்பது சரியானதொரு நடவடிக்கையாக இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ள பட்சத்தில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தெளிவான சட்ட ரீதியான வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, கல்வி நிறுவனத்தில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான ஒரு செயல் என்கிறார்.. மேலும் இது போன்ற ஒரு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளுமானால் அது இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துள்ளதாகவே கருத முடியும் என்று கூறுகிறார்.
மத கல்வி நிறுவனங்களில் அனைத்து மதத்தினரும் பணியாற்றும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிறுபான்மையினர் நடத்தி வரக்கூடிய பள்ளிகள் கல்லூரிகளில் பல இந்துக்கள் பணியாற்றி வருவதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.