• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்து சமய அறநிலையத் துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் இந்துகளுக்கு மட்டுமே பணி: தமிழக அரசு

இந்து சமய அறநிலையத் துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் இந்துகளுக்கு மட்டுமே பணி: தமிழக அரசு

கபாலீஸ்வரர் கலை,  அறிவியல் கல்லூரி

கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி

கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  • Share this:
    இந்து சமய அறநிலையத் துறை நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    தமிழக இந்து அறநிலைய துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து அறநிலையத் துறை சார்பில் அக்டோபர் 13ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

    அதில், சம்மந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவர் தன் மனுவில், தாய் மொழியை தமிழாக கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது என்றும், இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மைய இயக்குநர்புவியரசன் தகவல்!


    மேலும் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் படிங்க: குயின்ஸ்லேண்ட் நிலத்தை மீட்க, வருவாய் துறையுடன் இணைந்து நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு


    இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: