தமிழகத்தில் இதுவரை 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 9 சதவீதம் தான்

தடுப்பூசி

அதிகபட்சமாக, சென்னையில் இரண்டு லட்சத்து 97 ஆயிரத்து 521 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை தவறவிட்டுள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 9 சதவீதத்தினர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 16 லட்சம் பேர், இரண்டாவது தவணை தடுப்பூசி போடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட 6 கோடியே 60 லட்சம் பேரில் 2 கோடியே 15 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் 53 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டுள்ளனர். அதாவது, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 9 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

  16 லட்சத்து 12 ஆயிரத்து 623 பேர் உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி யை போட்டுக் கொள்ளவில்லை. இவர்களில் 28 நாட்களுக்கும் மேலாக இரண்டாவது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 48. 84 நாட்களுக்குப் பிறகும், 10 லட்சத்து 48 ஆயிரத்து 575 பேர் இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

  அதிகபட்சமாக, சென்னையில் இரண்டு லட்சத்து 97 ஆயிரத்து 521 பேர் இரண்டாவது தவணை ததடுப்பூசி யை தவறவிட்டுள்ளனர். கோவையில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 794 பேரும், திருச்சியில் 55 ஆயிரத்து 826 பேரும் உரிய நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதேபோல, மதுரையில் 52 ஆயிரத்து 766 பேரும், வேலூர் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 9 பேரும், சேலத்தில் 50 ஆயிரத்து 285 பேரும் உரிய காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து நியூஸ் 18-க்கு பேட்டியளித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 6.6 கோடி பேரில் 2.15 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 53.5 லட்சம் பேர் அதாவது 9% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 16 லட்சம் பேர் உள்ளனர். அதாவது தடுப்பூசி மையங்கள் வாரியாக உரிய நேரத்தில் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளாதவர்களின் பட்டியல் எடுக்கப்படுகிறது.

  சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சுகாதார துணை இயக்குனர்கள் மூலமாக அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தும் பணி நடைபெறுகிறது. ஆனால் இப்படி பட்டியல் எடுப்பது கடினமானதாகும் எனவே பொதுமக்கள் இரண்டு தவணை தடுப்பூசி தான் முழுமையான பாதுகாப்பு என்பதை உணர்ந்து தாங்களாகவே தங்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்துகிறேன்.

  கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் இரண்டாவது தவணைக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக ஒருவருக்கு கோவாக்சின் தான் உகந்தது என்ற பட்சத்தில் மட்டும் அவர்களுக்கு முதல் தவணை வழங்கப்படும். தற்போது 3 லட்சத்துக்கும் மேல் கோவாக்சின் கையிருப்பு உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: