ஆன்லைன் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இந்த பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் வந்து நேரத்தை கழிப்பது வழக்கம். கடந்த 2018-ஆம் ஆண்டு வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை நேரில் வந்து பார்க்க வாய்ப்பில்லாத பார்வையாளர்கள் ஆன்-லைன் மூலம் நேரடியாக (Live Streaming) பார்க்கும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதன்மூலம் https://www.aazp.in/live-streaming/ என்ற இணைப்பை பயன்படுத்தி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு, யானை, வெள்ளை புலி, வங்கப் புலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளையும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். மேலும் ஒவ்வொரு நாளும் ஒரு ஷவரில் குளிப்பாட்டுவது அவற்றிற்கு உணவூட்டுவது போன்றவற்றை 12 மணி முதல் 4 மணி வரை காண முடியும். அந்த வகையில் கடந்த வாரம் காண்டாமிருகம், காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளுக்கு ஷவர் குளியல், சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு அது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தற்போது கொரோனாவின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு நிலை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் இணையம் வாயிலாக விலங்குகளை தங்களது குழந்தைகளுக்கு காண்பிக்க பலரும் விரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் நாளொன்றிற்கு நான்காயிரம் முதல் ஆறாயிரம் பேர் வரை நேரலையில் விலங்குகளை கண்டு ரசிப்பதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு காரணமாக உயிரியல் பூங்கா அடைக்கப்பட்டாலும் தேவையான ஊழியர்களைக் கொண்டு போதுமான உணவு தேவையையும் ஏற்பாடு செய்து அனைத்து உயிரினங்களையும் பராமரித்து வரும் நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி நேரலையில் வன உயிரினங்களை பார்க்க செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது. குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே விளையாட அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டில் குழந்தைகளின் நேரத்தை கடத்த முயலும் பெற்றோர்களுக்கு இந்த இணையம் வாயிலாக விலங்குகளை பார்க்கும் வசதி பெரிதும் உதவிகரமாக அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.