ரம்மியால் விபரீதம்: கூடைப்பந்து வீரர் செயின் பறிப்பவரான கதை

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பொறியியல் பட்டதாரி, தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

 • Share this:
  பொறியியல் படிப்பு முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானதால் பணத்தை இழந்து தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் 23 வயதே ஆன இளைஞர் ஜஸ்டின் ராஜ்.

  குமரி மாவட்டம் கருங்கல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயின்பறிப்பு புகார்கள் அதிகளவில் வந்து குவிந்தன. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சிக்கினார். அவரைப் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

  பிடிபட்ட இளைஞர், மேக்காமண்டபம் ஈத்தவிளையைச் சேர்ந்த 23 வயதான ஜஸ்டின் ராஜ் என்பது தெரியவந்தது. பொறியியல் பட்டப் படிப்பு முடித்த இவர், கூடைப் பந்து விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று முக்கிய வீரராக முன்னேறி வந்த நிலையில், வேலைக்கும் செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கியுள்ளார்.

  ஆரம்பத்தில் சிறிய அளவில் பணத்தை செலுத்தி விளையாடிய இவர் நாளாக நாளாக ரம்மிக்கு அடிமையாகி விட்டார் தமிழகத்தில் ரம்மி தடை செய்யப்பட்ட நிலையில் செல்போனில் லொகேஷன் மாற்றி விளையாடி வந்தார். ஒரு கட்டத்தில் தனது தாயின் நகைகளை அடகு வைத்து வாங்கிய பணம் இரண்டரை லட்சம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார்.

  தகவல் அறிந்த பெற்றோர் கேட்டபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க, நண்பருடன் சேர்ந்து கடந்த மாதம் திருவட்டார் காவல்நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் 6 பவுன் செயினைப் பறித்துள்ளார்.

  அதேபோல் இரணியல் காவல்நிலைய எல்லையில் ஒரு பெண்ணிடம் 4 பவுன் செயினையும், தக்கலை, கருங்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் செயின்பறிப்புகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் தனது வீட்டருகில் வசிக்கும் சிறுவர்களை, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுத்தி அடிமையாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

  ஜஸ்டின் ராஜைக் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளையும், செயின் பறிக்கப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்துயும் பறிமுதல் செய்தனர். ஜஸ்டின் ராஜுக்கு உதவியாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  மேலும் படிக்க... கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

  படித்து முடித்து வேலைக்கு சென்று பெற்றோரைக் காக்க வேண்டிய மகன், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி செயின்பறிப்புத் திருடனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: