புரெவி புயல் தாக்கம்: கோவில்பட்டியில் வெங்காய மகசூல் கடும் பாதிப்பு- வேதனையில் விவசாயிகள்

Youtube Video

வெங்காய மகசூல் அதிக அளவில் இருந்த போதும், போதிய விலை கிடைக்கவில்லை என கோவில்பட்டி சுற்றுப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரப்பதத்தை காரணம் காட்டி உள்ளூர் வெங்காயத்தை புறக்கணித்து, வெளிநாட்டு இறக்குமதியை அதிகப்படுத்துவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. இங்கு விளையும் வெங்காயம் தரத்துடன் சுவையும் கொண்டது என்பதால் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் வெங்காயம் விலை ஏற்றம் கண்டது. இதனால், இந்தாண்டு நல்ல லாபம் கிடைக்கும் என நம்பிய விவசாயிகள் அதிக அளவில் வெங்காயம் நடவு செய்தனர். நண்டுகால் அழுகல் நோயால் விளைச்சல் கணிசமாக பாதிக்கப்பட்ட போதும், உரமிட்டு, பூச்சி மருந்து தெளித்து தங்களது பயிரை காப்பாற்றினர். இருப்பினும் புரெவி புயலை தொடர்ந்து பெய்த கன மழையால் நிலத்தில் தண்ணீர் தேங்கி அறுவடைக்கு தயாரான வெங்காயம் அழுகத் தொடங்கியது.

  நோய் தாக்கம் மற்றும் மழை நீர் தேக்கம் ஆகியவற்றால் 50 சதவீதம் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள வெங்காயம் அறுவடை செய்யப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

  வெங்காயத்தை அறுவடை செய்யாமல் விட்டால் நிலத்திலேயே அழுகி துர்நாற்றம் வீசுவதுடன், நிலம் பாழ்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். இதனால், குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க...ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திமுகவை தோற்கடிப்போம்..

  வெங்காய மகசூல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   

  வெங்காயம் பயிரிட ஏக்கருக்கு 40,000 ரூபாய் வரை செலவிட்டு தற்போது 10,000 கூட கிடைக்கவில்லை என்பதால் தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரியுள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: