எகிப்து வெங்காய வருகை! தமிழகத்தில் குறையும் வெங்காயத்தின் விலை

வெங்காயம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    வட மாநிலங்கள் மட்டுமின்றி எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காய வரத்தால் தமிழகத்தில் வெங்காய விலை கிலோவிற்கு 50 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் வரலாறு காணாத மழை காரணமாக வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் வெங்காய விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. தமிழகத்தில் கிலோ வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனையானது.

    வெங்காய பதுக்கலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் விலை குறையாததால், எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அத்துடன், கர்நாடக மாநிலம் பெல்லாரி, ஆந்திராவில் இருந்து வெங்காய வரத்து கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் வெங்காய விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4-ம் தேதி கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று 130 ரூபாயாகக் குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் விலை கடந்த 6ம் தேதி 180 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 130 ரூபாய்க்கு விற்பனையானது.

    இறக்குமதியான எகிப்து வெங்காயம் சந்தைக்கு வந்தடையாவிட்டாலும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வெங்காயம் வந்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

     

    கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம், இன்று 60 ரூபாய் வரை குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையானது. மதுரையில் கடந்த 4ம் தேதி 210 ரூபாக்கு விற்பனையான நிலையில், இன்று 145 ரூபாயாகக் குறைந்துள்ளது.

    திருச்சியில் 4-ம் தேதி 140 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம் தற்போது 100 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 120 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. எகிப்தில் இருந்து இறக்குமதியான வெங்காயம் கருஞ்சிவப்பு நிறத்தில் பெரிய அளவில் இருப்பதால் அதனை வாங்க மக்களிடையே தயக்கம் நிலவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மார்க்கெட்டில் பக்ரான் என்பவருக்கு சொந்தமான கடையில், ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மக்கள் அடித்துப்பிடித்து வாங்கிச்சென்றனர். 100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என கடையில் ஒட்டப்பட்டிருந்த விலைப் பட்டியலை வாடிக்கையாளர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து தங்களது உறவினர்களுக்கு பகிர்ந்ததால், வெங்காயம் வாங்க ஏராளமானோர் படையெடுத்தனர்.

    வெங்காயத்தை பதுக்கி வைப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் குடிமைப்பொருட்கள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி சாந்தி, அரசு குறிப்பிட்ட அளவை விட வெங்காயத்தை பதுக்கி வைத்தாலோ அல்லது கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    இதேபோன்று மாநிலம் முழுவதும் வெங்காய விலை கணிசமாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். அதேசமயம், ஏற்கனவே அதிகவிலைக்கு வெங்காயத்தை கொள்முதல் செய்திருந்த வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    Also see:


    Published by:Karthick S
    First published: