மழையால் செடியிலேயே அழுகிய வெங்காயம்... உள்நாட்டு வரத்து சரியும் என்பதால் விலை இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு...!

மழையால் செடியிலேயே அழுகிய வெங்காயம்... உள்நாட்டு வரத்து சரியும் என்பதால் விலை இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு...!
News18
  • News18
  • Last Updated: December 4, 2019, 9:45 AM IST
  • Share this:
டிசம்பர் மாதம் அறுவடை செய்ய வேண்டிய சின்ன வெங்காயம், செடிகளிலேயே அழுகி வருவதால் அடுத்த சில வாரங்களுக்கு உள்நாட்டு வரத்து கடும் சரிவை சந்திக்கும் என்பதால் வெங்காய விலை இன்னும் ஏற்றம் காண வாய்ப்புள்ளது.

வெங்காயத்தின் விலை உறிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் நிலையில் இருப்பதை நாம் அறிவோம். பொதுவாகவே மழை காலங்களில் வெங்காய வரத்து குறைந்து விலை ஏறுவது வழக்கம். ஆனாலும் இந்த முறை போல, இந்த அளவிற்கு விலை ஏற்றத்தை வெங்காயம் கண்டதில்லை.

70 ரூபாயை தொட்டு, இன்று கிலோ ரூபாய் 140-க்கு விற்கும் அளவிற்கு சின்ன வெங்காயம் பெரிய விலையில் நிற்கிறது. மழை தொடர்வதால் உள்நாட்டு வெங்காய வரத்து கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக எகிப்து நாட்டிலிருந்து ஆறாயிரத்து 90 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதன் பிறகும் உள்நாட்டு வரத்து சீராகாத நிலையில் துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரியில் நடைபெறும் உள்நாட்டு வெங்காய அறுவடை பெரிய அளவில உதவும் என அரசு தரப்பில் எண்ணியிருந்த நிலையில், தற்போது அதற்கும் பாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் டிசம்பர் மற்றும் ஜனவரியில் துவங்கவிருந்த அறுவடை வெங்காயங்கள், பயிரிலேயே அழுகி வீணாகி வருகின்றன. மதுரை மாவட்டம் சாத்தையார் அணை மலைப்பகுதியான தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல் கிராமங்களில் சின்ன வெங்காயம் ஒரு போக விவசாயமாக மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கிலோ ரூபாய் 40 வீதம் வாங்கப்பட்ட வெங்காயங்கள் பயிரிடப்பட்டு டிசம்பர் இறுதியில் அறுவடை துவங்குவதாக இருந்தது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயங்கள், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் நீர் தேங்கி செடியிலேயே அழுகி போயுள்ளது. நேற்று செடிகளிலிருந்து அழுகிய துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து அவற்றை பார்வையிட்ட விவசாயிகள், 300 ஏக்கர் வெங்காயமும் அழுகியதால் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தற்போதுள்ள விலைக்கு மூன்றில் ஒரு பங்கு கிடைத்தால் கூட தங்களுக்கு அதீத லாபம் எனக்கூறும் விவசாயிகள்; ஆனால் முதலுக்கு வேட்டு வைத்து ஒட்டு மொத்த வெங்காயமும் அழுகியதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். அழுகிய வெங்காயத்தை நிலத்தில் வைத்தால், அடுத்து பயிரிடும் பயிரை அது பாதிக்கும் என்பதால், வேறு வழியின்றி காய்த்து அழுகிய வெங்காய செடிகளை பிடுங்கி எரியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல் காலத்தில் ஏற்படும் பாதிப்பை தாங்கம் சந்தித்திருபு்பதால் தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். திண்டுக்கல், மதுரை சந்தை வழியாக தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வரும் மதுரை வெங்காயத்தின் டிசம்பர், ஜனவரி மாதத்திற்கு அறுவடை இருக்காது என்பதாலும், பிற பகுதிகளிலும் இதே நிலையே இருப்பதாலும் அடுத்த சில வாரங்களுக்கு உள்நாட்டு வரத்து கடும் சரிவை சந்திக்கும். இதனால் வெங்காய விலை இரு சதத்தை கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading