உச்சத்தில் வெங்காய விலை; முட்டைக்கோஸ் வெள்ளரியுடன் களமிறங்கிய ஹோட்டல்கள்

உச்சத்தில் வெங்காய விலை; முட்டைக்கோஸ் வெள்ளரியுடன் களமிறங்கிய ஹோட்டல்கள்

உச்சத்தில் வெங்காய விலை.

வெங்காய விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் அதை சமாளிக்கும் பொருட்டு முட்டைக்கோஸ் மற்றும் வெள்ளரிக்காய்களை பயன்படுத்த ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.

  • Share this:
மழை காரணமாக வெங்காய வரத்து குறைந்து, தொடர்ந்து வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் அவற்றை பயன்படுத்துவதில் தொடர்ந்து பின்னடைவு இருந்து வருகிறது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் விலை உயர்ந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஊரடங்கிற்கு தளர்த்தப்பட்டு, நீண்ட இடைவெளிக்குப்பின் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை பாதிக்கும் என்பதால் மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றுகூடி விலை ஏற்றக்கூடாது என்று முடிவுவெடுத்துள்ளனர். அத்தோடு வெங்காய பயன்பாட்டை 50 சதவீதத்திற்கு மேல் குறைத்து, அதற்கு மாற்றாக முட்டைக்கோஸ் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மதுரையில் உள்ள  ஹோட்டல்களில் வெங்காயத்திற்கு சரிக்கு சரியாக முட்டைக்கோஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Also read: பூச்சித்தாக்குதல், விலை வீழ்ச்சி.. தக்காளிகளை ஏரியில் கொட்டிய விவசாயிகள்

அசைவ உணவிற்கு தயிர் பச்சடி அத்தியாவசியம் என்பதால், அதற்கு வெங்காயம் பயன்படுத்துவதில் சிக்கல் நீடிக்கும் காரணத்தால் வெங்காயத்திற்குப் பதிலாக வெள்ளரிக்காய்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்ட ஹோட்டல்களில் தயிர் வெங்காயத்திற்கு பதிலாக தயிர் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்படுகிறது. மாற்று ஏற்பாடு செய்தாலும் வெங்காயம் தரக்கூடிய ருசியை முட்டைகோஸ் தருவதில்லை என்கிற கவலை வாடிக்கையாளர்களிடம் எழுந்துள்ளது.அதே நேரத்தில், விலை ஏற்றாமல் உணவு வழங்குவதற்கு முட்டைக்கோஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை என்கின்றனர் உணவக உரிமையாளர்கள். திடீரென முட்டைகோஸ் மற்றும் வெள்ளரிக்காய்க்கு ஏற்பட்டுள்ள இந்த கிராக்கியால் முட்டைக்கோஸ் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதாக முட்டைக்கோஸ் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சுவையான உணவுகளை வழங்க வெங்காயம் அவசியம் என்றாலும், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்திருப்பதாக மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் தெரிவித்தார்.

வெங்காய விலை குறையும் வரை இந்நிலை தொடரும் என்றும் வெங்காயம் விலை இயல்பு நிலைக்கு திரும்பியதும் பழையபடி சமையல் நடைபெறும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Published by:Rizwan
First published: