மழை, நோய் தாக்கத்தால் அழுகிய வெங்காயம்... லாபம் கிடைக்கும் என்று நம்பிய விவசாயிகளுக்கு வேதனைதான் மிச்சம்...!

வேதனையுடன் விவசாயிகள்

  • News18
  • Last Updated :
  • Share this:
நல்ல விலை இருந்தும் தொடர் மழை, நோய் தாக்கத்தினால் வெங்காயம் தங்களுக்கு கை கொடுக்கவில்லை என்கின்றனர் வேதனையுடன் கோவில்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், எட்டயபுரம், சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 80 ஆயிரம் ஏக்கர் மானவாரி நிலங்களில் இந்தாண்டு விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.

தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டுவிட இந்தாண்டு அதிகளவில் விவசாயிகள் வெங்காயத்தினை பயிரிட்டது மட்டுமின்றி, மிளகாய், உளுந்து செடிகளுக்கு இடையே ஊடு பயிராகவும் விவசாயிகள் வெங்காயத்தினை பயிர் செய்து இருந்தனர்.

தற்பொழுது வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவை காரணமாக தங்களுக்கு இந்தாண்டு நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்பி இருந்த விவசாயிகளுக்கு நண்டுகால் நோய் மற்றும் அழுகல் நோய் தாக்கத்தின் காரணமாக வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்த மழையினால் செடிகளில் நீர் தேங்கி அழுகல் நோய் ஏற்பட்டதாகவும், காற்றில் அதிகளவு ஈரப்பதம் இருந்த காரணத்தினால் வெங்காயத்தின் தண்டுகள் நண்டுகால் நோயினால் பாதிக்கப்பட்டு வளர்ச்சியடையவில்லை என்கின்றனர் விவசாயிகள். 60 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விதை வெங்காயம் வாங்கி பயிரிட்டு, 4 முறை மருந்து தெளிந்து, களை எடுத்தல் என சுமார் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் செலவு செய்த தொகை கூட கிடைக்காது என்கின்றனர்.

நோய் தாக்கிய பயிர்களை பிடுங்கி எறிவதை விட அவற்றை வேறு எதுவும் செய்ய முடியாது என்றும், வழக்கமாக மார்கழி, தை மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் இந்தாண்டு தங்களுக்கு வெங்காயம் பெருத்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாகவும், பயிர்காப்பீட்டு தொகை மூலமாக கிடைக்கும் தொகை கிடைத்தால் மட்டுமே அடுத்த முறை விவசாயம் மேற்கொள்ள முடியம் என்று தெரிவித்துள்ளனர்.

 
Published by:Sankar
First published: