நிலுவையில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் தடை...!

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒ.என்.ஜி.சி. வேதாந்தா நிறுவனங்கள் கடந்த இரண்டு  ஆண்டுகளில் அனுமதிகோரி விண்ணப்பித்த ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளும் புதிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட திட்டங்கள்தான் என்று தெரியவந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மேலாண்மை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் புதிதாக எந்தவொரு ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிணறுகள் இந்த புதிய  சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில், 300-க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்கும் பணிகளை தொடங்க முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறையுடன் ஹைட்ரோகார்பன் நிறுவனங்கள் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அந்த நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் எண்ணெய் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல், கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம், வனத்துறை அனுமதி கோரி விண்ணப்பம் செய்கின்றன.

இந்த அனுமதிகள் பெற்ற பின்னர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடமும், தமிழ்நாடு தொழிற்துறையிடமும் அனுமதி வாங்கினால் மட்டுமே திட்டங்களை தொடங்க முடியும்.

PEL/PML தொழிற்துறையை பொருத்தமட்டில் எண்ணெய், எரிவாயு இருக்கிறதா  என்பதை ஆய்வு செய்ய பெட்ரோலிய ஆய்வு அனுமதி(Petroleum Exploration Licence) 7ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ஆய்வின்போது எண்ணெய், எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டால் உற்பத்தியை துவக்குவதற்கு பெட்ரோலிய சுரங்க குத்தகை (Petroleum Mining Lease)  20ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

ஆர்.டி.ஐ. தகவல்: மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2017-ம் ஆண்டிற்குப் பின்னர் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு open acreage licensing கொள்கையின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக்கிணறுகள் அமைப்பதற்காக பெட்ரோலிய ஆய்வு அனுமதி கோரிய விண்ணப்பம் மற்றும்  நாகப்பட்டினம் மாவட்டம் மதானம், அரியலூர் மாவட்டம் செந்துறை, உடையார்பாளையம், மற்றும் நெடுவாசல், காரைக்கால் ஆகிய இடங்களில் எண்ணெய், எரிவாயு உற்த்தியைத் துவக்குவதற்கு பெட்ரோலிய சுரங்க குத்தகை கோரிய விண்ணப்பங்களை தமிழக அரசு அனுமதி அளிக்காமல் நிலுவையிலேயே வைத்துள்ளது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு தொழிற்துறை முதன்மை செயலாளர் முருகானந்தமிடம் விசாரித்தபோது இன்னும் தொழிற்துறை சார்பில் அனுமதி அளிக்காத திட்டங்கள் அனைத்தும் புதிய திட்டங்களாகத்தான் பார்க்க வேண்டும்.

அண்மையில் இயற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மேலாண்மை சட்டத்தின்கீழ் இந்த புதிய திட்டங்களை துவக்க முடியாது. மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஹைட்ரோகார்பன் எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய குழு அமைக்கப்பட்டு தொடரச்சியாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு PML/PEL வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கும் திட்டங்களை கீழே காணலாம்.

1) 2018ஆம் ஆண்டு open acreage licensing policy யின் முதற்கட்ட ஏலத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தின் நிலம் மற்றும் கடலை உள்ளடக்கிய 731சதுர கிலோமீட்டர் பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக  ஒன்.ஜி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது கடலூரில் 35 கிணறுகளும், நாகப்பட்டினத்தில் 5 கிணறுகளையும் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சுற்றுச்சூழல் துறை அனுமதி மற்றும் PEL அனுமதி கோரி விண்ணப்பித்தது.

2) வேதாந்தா நிறுவனத்திற்கு விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் நிலம் மற்றிம் கடலை உள்ளடக்கிய 1794 சதுர.கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த பகுதிகளில் 116 கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் துறை அனுமதி மற்றும் PEL அனுமதி கோரி விண்ணப்பித்தது.

3)  வேதாந்தா நிறுவனத்துடன் நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் நிலம் மற்றும் கடலை உள்ளடக்கிய 2574 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பகுதிகளில் 158 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் PEL அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.

4) 2004ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மதானத்தில் 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு ப்ளாக்கை New Exploration Licensing Policy யின் கீழ் ஓ.என்.ஜி.சி. 60% பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் நிறுவனம் 40% எனும் விகிதத்தில் குத்தகைக்கு எடுத்தது. இதில் பெட்ரோலிய ஆய்வு மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டு 2012-ம் ஆண்டு இங்கு கச்சா எண்ணெய் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இப்பகுதியில் மேற்கொண்டு எண்ணெய் எடுப்பதற்கான பெட்ரோலிய சுரங்க அனுமதி (PML) கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

5) 2007ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தின் உடையார்பாளையம் மற்றும் செந்துறை பகுதியை உள்ளடக்கிய 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு ப்ளாக்கை New Exploration Licensing Policy யின் கீழ் ஓ.என்.ஜி.சி. 80% பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் நிறுவனம் 20% எனும் விகிதத்தில் ஏலத்திற்கு எடுத்தது. இதில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள்  அமைக்கப்பட்டு   crude ஆயில் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இப்பகுதியில் மேற்கொண்டு எண்ணெய் எடுப்பதற்கான பெட்ரோலிய சுரங்க அனுமதி (PML) கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

6) 2016-ம் ஆண்டு சிறிய எண்ணெய் வள வயல்கள்  (Discovered Small Field) ஏலத்தில் காரைக்காலில் ஒரு தொகுதியை பாரத் பெட்ரோசோர்ஸ் நிறுவனமும், நெடுவாசலில் ஒரு தொகுதியை ஜெம் லேபராட்டரி நிறுவனமும் ஏலத்தில் எடுத்தது. இந்த நிறுவனங்களும் தமிழ்நாடு அரசிடம் பெட்ரோலிய சுரங்க அனுமதி (PML) கோரி விண்ணப்பித்திருந்தன.

கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கூறப்பட்ட நிலையிலும் கூட தமிழக அரசு  2ஆண்டுகளாக இத்திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தது நமக்கு கிடைத்த ஆவணங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனாலும் கூட  சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பினரும் இந்த விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்காமல் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்கின்றனர். இது தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் கருத்தை அறிய அவர்களை தொடர்பு கொண்டபோது உரிய பதில் இன்னும் கிடைக்கவில்லை. வேதாந்தா நிறுவனம் பதில் அளிக்கும் பட்சத்தில் அவர்களது கருத்து இந்த கட்டுரையில் இணைக்கப்படும்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: