கோவில் திருவிழாக்களை தவிர்த்து, கிராமப் பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக் கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் . தோவாளை அருகே உள்ள மாதவலயம் பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மடவாலயம் கிராமத்தில் தனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுவதாகவும் அந்த மாட்டிறைச்சி கடையால் தன் குடியிருப்பு பகுதிக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் அந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும் என மனு அளித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கிராம பஞ்சாயத்து தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர் ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்று உள்ளார். ஆனால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துகிறார்” என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி, ஆடு, பன்றி, ஆகியவற்றை வெட்ட அனுமதிக்கக்கூடாது. கோவில் திருவிழாக்களை தவிர்த்து, கிராமப் பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக் கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என்று இதற்கான சட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல், மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வழக்கறிஞர் கூறி உள்ளார். எனவே, உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்தினால், அதை ஆய்வு செய்து தடை செய்ய வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு.
எனவே, உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ( BDO) 3 வாரங்களுக்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai High Court, Meat