• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆணவக்கொலை: மதுரையில் இளைஞர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை!

ஆணவக்கொலை: மதுரையில் இளைஞர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை!

கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார்

கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார்

போலீசார் அனிதாவை மகளிர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணைக்கு மறுநாள் வரும்படி சதீஷ்குமாரிடம் கூறியுள்ளனர். அதன்படி வெள்ளிக்கிழமை காலை தெற்குவாசல் காவல்நிலையத்திற்கு சதீஷ்குமார் சென்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மதுரையில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாதி மறுப்பு திருமணமே கொலைக்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை தெற்கு மாரட் வீதியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில், சதீஷ்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர்.

    எச்சரிக்கை அடைந்த சதீஷ்குமார் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடத் தொடங்கினர். அவரை ஓட ஓட விரட்டி ஆயுதங்களால் தாக்கி ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. மரணத்தின் இறுதிக் கட்டத்தில் உயிருக்காக சதீஷ்குமார் துடிதுடித்த காட்சிகள் வெளியாகி மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சுற்றி நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சதீஷ்குமார் மரணத்தைத் தழுவுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் துயரத்தின் உச்சகட்டம்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சதீஷ்குமார் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

    மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அனிதா; இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

    சதீஷ்குமார் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஊருக்கு வந்து செல்லும் போது அனிதா உடன் காதல் மலர்ந்தது. இருவீட்டாரின் கடும் எதிர்ப்பையும் மீறி 2017-ம் ஆண்டு அனிதாவைக் கரம்பிடித்தார் சதீஷ்குமார்.

    இந்த நிலையில் அனிதாவிற்கு காவல்துறையில் பணி கிடைக்கவே அவர் திருச்சியில் காவல் பயிற்சிப் பிரிவில் சேர்ந்தார். அதையடுத்து சில நாட்களிலேயே அனிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மீண்டும் கணவன் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

    உடல்நிலை சரியாகும் வரை கோவையில் சதீஷ்குமாருடன் அனிதா வாழ்ந்து வந்துள்ளார். சில மாதங்களில் அனிதாவின் தாயார் அவரை மீண்டும் வீட்டிற்கு வரும்படி அழைத்ததாகவும், அவர் அங்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர் சதீஷ்குமாரின் உறவினர்கள்.

    தாய் வீட்டிற்கு அனிதா சென்ற நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    4 மாத கர்ப்பிணியாக இருந்த அனிதா, வீட்டில் இருந்து தப்பித்து வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி கடந்த 21-ம் தேதி சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து தெற்குவாசல் காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.

    போலீசார் அனிதாவை மகளிர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணைக்கு மறுநாள் வரும்படி சதீஷ்குமாரிடம் கூறியுள்ளனர். அதன்படி வெள்ளிக்கிழமை காலை தெற்குவாசல் காவல்நிலையத்திற்கு சதீஷ்குமார் சென்றுள்ளார்.

    இருதரப்பு விசாரணையும் நடந்து கொண்டிருந்த நிலையில் மதிய உணவிற்காக சதீஷ்குமார் வெளியில் வந்த நிலையில் தான் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அனிதாவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறும் சதீஷ்குமார் உறவினர்கள், கொலை செய்து விடுவதாக முதல்நாளே மிரட்டியதாகவும், வேற்று சாதியைச் சேர்ந்த சதீஷ்குமார் தங்கள் தங்கையை மணந்து கொண்டதுதான் அவர்கள் கொலை செய்ததற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சதீஷ்குமாரின் கொலை குறித்து போலீசாரிடம் விசாரித்த போது அவர்கள் சில விளக்கங்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சதீ்ஷ்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரிடம் இருந்து பிரிந்து வாழ விரும்புவதாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனிதா புகாரளித்துள்ளார்.

    போலீசார் அதற்கு சிஎஸ்ஆர் எனப்படும் சமூகப் பதிவேடு ரசீது அளித்துள்ளனர்.

    அதையடுத்து அனிதாவின் சம்மதத்துடன் தான் அவருக்கு 2-வது திருமணமும் நடந்துள்ளது.

    ஆனால், கடந்த 21-ம் தேதி மீண்டும் தெற்குவாசல் காவல்நிலையம் வந்த அனிதா, தனது 2-வது கணவன் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக புகாரளித்துள்ளார்

    மேலும் முதல் கணவன் சதீஷ்குமாருடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    அதை ஏற்றுக்கொண்ட போலீசார் 85/19 என்ற எண் கொண்ட சிஎஸ்ஆர் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கி நடந்து வந்தது என்று கூறுகின்றனர் போலீசார்.

    இந்தக் கொலை வழக்கில், கோவில்பட்டியில் பதுங்கியிருந்த கூலிப்படையைச் சேர்ந்த அரவிந்த் குமார், விஜய், ஆனந்த், தனபாண்டி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை, கொலை என்ற அடிப்படையில் 304வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: