Pubg Suicide | மீண்டும் பப்ஜி கொடூரம்.. ஓசூரில் மாணவன் தற்கொலை..

Youtube Video

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட சவால் போட்டியில், 16 வயது மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேச முடியாத மாற்றுத்திறனாளியான தாயை தவிக்க விட்டு மாணவன் இந்த விபரீத முடிவை எடுத்ததன் பின்னணி என்ன?

  • Share this:


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் 16 வயதான ரவி. இவர் ஓசூர் அரசு தொழிற்கல்லுாரியில் முதல் ஆண்டு படித்து வந்தார். தந்தையை இழந்த ரவி, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தாய் ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார். இவரது சகோதரர் 18 வயதான விஷ்வா பெங்களூருவில் பணியாற்றி வந்தார். ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்ததால் அதற்காக செல்போன் வைத்திருந்தார் ரவி.

ஆனால், ஆன்லைன் வகுப்பு என்று கூறி, பப்ஜி விளையாட்டில் அதிக நேரம் விளையாடி வந்துள்ளார். அதைப் பார்த்த தாயும் சிற்றப்பாவும் பலமுறை கண்டித்தும் அவரால் பப்ஜி விளையாடுவதில் இருந்து மீற முடியவில்லை. இந்த நிலையில், சனிக்கிழமை கட்டிட வேலைக்கு சென்ற தாய் ஜெயலட்சுமி மாலை வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த ஜெயலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவைத் திறந்து பார்த்தபோது, ரவி தனது தாயின் புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வாய் பேசமுடியாத தாய் ஜெயலட்சுமி செய்வதறியாமல் கதறி அழுதது பார்ப்போரின் இதயத்தை கலங்க வைத்தது.

தகவல் அறிந்த ஓசூர் நகர போலீசார் சடலத்தை அகற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தாலும் விபிஎன் வசதியைப் பயன்படுத்தி செல்போனில் லோகேஷனை மாற்றி விளையாட முடியும். இந்த அடிப்படையில்தான் ரவியும் பப்ஜி விளையாட்டை விளையாடியுள்ளார்.

விளையாட்டின் போது நண்பர்களிடையே ஏற்பட்ட போட்டியில் சவால் விட்டுள்ளனர். அதில் ஏற்பட்ட பிரச்னையில் திடீரென மனமுடைந்த ரவி, தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க...சசிகலா காரில் பறக்கும் அதிமுக கொடி - டிடிவி தினகரன் அதிரடி

பப்ஜி விளையாட்டைத் தடை செய்தாலும், இதுபோல மாற்று வசதிகளைப் பயன்படுத்தி விளையாடுவதற்கும் நிரந்தரத் தடை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வாழ்ந்து காட்ட வேண்டிய வயதில், சிறிய பிரச்னைக்காக பப்ஜி விளையாட்டினால் மாணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

=========================

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050







உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: