• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வறுமையால் விற்பனையாகும் பரிசுப் பொருட்கள்...! மாடுபிடி வீரர்களின் சோகமான மறுபக்கம்

வறுமையால் விற்பனையாகும் பரிசுப் பொருட்கள்...! மாடுபிடி வீரர்களின் சோகமான மறுபக்கம்

News18

News18

  • News18
  • Last Updated :
  • Share this:
உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளையும், போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவிக்கும் மாடுபிடி வீரர்களையும் நாம் அன்றைய தினம் கொண்டாடுவது உண்டு.

பரிசு மழையில் நனையும் மாடுபிடி வீரர்கள், அந்த பரிசுகளை வீட்டிற்கே எடுத்துச் செல்ல முடியாமல் விற்கும் அளவிற்கு வறுமையில் வாடும் அவல நிலையில் வசிப்பது நாம் அனைவரும் அறியாத ஒன்று.

தங்க காசு, வெள்ளி காசு என்றிருந்த பரிசுகள் கார், பைக் என மாறியது கடந்த மூன்று ஆண்டில் தான். ஆனால் அவ்வாறு பெறப்படும் பரிசுகள் உரியவரிடத்தில் இருப்பதில்லை; விற்கப்படுகிறது என்கிற பேச்சு பரவலாக உண்டு. அதன் உண்மை நிலை அறிய களத்தில் இறங்கியது நியூஸ் 18 தமிழ்நாடு.

கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகள் அடக்கி முதல் பரிசாக கார் பரிசு பெற்ற ரஞ்சித் என்ற ராம்குமாரின் வீட்டிற்கு சென்ற போது, பிளக்ஸ் போர்டால் ஆன சுவரை கடந்தததும் கம்பீரமாய் நின்றது இரு காளைகள்.நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பரிக்க ராம்குமார் பரிசாய் வாங்கிய காரை சுற்றிலும் காணவில்லை. அங்கிருந்த அவரது தாய் சுந்தரியிடம் கேட்ட போது, நிறுத்த கூட இடமில்லாத எங்களுக்கு எதற்கு கார்? அதனால் விற்றுவிட்டோம் என வறுமையை வெறுமையில் கூறினார்.

மிக சிறிய வீட்டில் தன் மகன் பெற்ற சின்ன சின்ன பரிசுகளை அடுக்கி வைக்கவே இடமின்றி அவற்றை அள்ளி போட்டு குவித்து வைத்திருந்தார் சுந்தரி. வீட்டு செங்கல்களுக்கு நிகராக ராம்குமார் பெற்றிருந்த பரிசுகள் சுற்றிலும் இருந்தன.இது போதும் கார் எதற்கு என விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தில் இரு காளைகளை வாங்கி அவற்றை வளர்த்து ஆனந்தம் காண்கிறது ராம்குமாரின் குடும்பம். கிடைத்த கூலி வேலைகளை பார்த்து மாதம் 7,000 ரூபாய் சம்பாதிக்கும் ராம்குமாரின் ஊதியம், இரு காளைகளை பராமரிக்கவே மாதந்தோறும் போதுமானதாக இருக்கிறது.

காருக்கு எரிபொருள் ஊற்றி புகையாக வீணாக்குவதற்கு பதில் காளைகளுக்கு செலவழித்து பாரம்பரியத்தை காப்பாற்றலாம் என்பதே ராம்குமாரின் விருப்பம். சுற்றி வறுமை, கார், பைக் பரிசுகளை வைத்து சமாளிக்க முடியாது என்பது நிதர்சனம்.

அதனால் உயிரை பணையம் வைத்து பெற்ற பரிசை அனுபவிக்காமல் அப்படியே விற்று அடுத்தகட்ட அன்றாட வாழ்விற்கு தயாராகிறது மாடுபிடி வீரர்களின் வாழ்க்கை. இதில் ராம்குமார் மட்டுமல்ல, இதற்கு முன் கார், பைக் பரிசு பெற்றவர்களுக்கும் இதே நிலையே.காய்த்து போன அவர்களின் கரங்களுக்கு காளையின் திமில் கச்சிதம் தான் என்றாலும், வறுமை என்கிற வலுவலுப்பு அவர்களின் பிடிமானத்தை அசைத்து பார்த்துவிடுகிறது.

ஆண்டிற்கு ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படும் மாடுபிடி வீரர்களின் மறுபக்கத்தை முதல்முறையாக வெளியிடுகிறோம். உயிரை பணையம் வைத்து காளைகளை அடக்குவது பரிசுகளுக்காக அல்ல, அது தான் அவர்களின் வாழ்க்கை. சங்கு எப்படி சுட்டால் வெண்மை தருமோ அது போல் தன்னை பணையம் வைத்து ஜல்லிக்கட்டில் ரசிக்க வைக்கும் உண்மையான வீரர்கள் தான் மாடுபிடி வீரர்கள்.

Also Read:

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விளையாட்டுகளைத் தெரிந்துகொள்வோமா?

போகிப் பண்டிகையில் இந்தப் பொருட்களை எரித்தால் நடவடிக்கை... மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை
Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: