Home /News /tamil-nadu /

அச்சுறுத்தும் ஒமைக்ரான் பரவல்: நாம் செய்யவேண்டியது என்ன?

அச்சுறுத்தும் ஒமைக்ரான் பரவல்: நாம் செய்யவேண்டியது என்ன?

Omicron

Omicron

Omicron | ஒமைக்ரான் வைரஸ் பெரிய அளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நாம் தன்னளவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டியது அவசியமாகிறது.

2022ல் இன்னொரு முழு ஊரடங்குக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்பினால் 95 சதவீதம் பேரின் பதில் வாய்ப்பே இல்லை என்பது தான். ஏற்கனவே வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் வீசிய சுனாமியால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு வைரஸ் திரிபு. அதன் பரவல் காரணமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னொரு ஊரடங்கு போடப்படலாம் என்ற பேச்சு பரவலாக பலரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.

ஒமைக்ரான் பரவலின் பாதிப்பு வெகுவாக இல்லை என்றாலும் அதன் பரவும் வேகம் தான் முந்தைய டெல்டா வைரசை விட பன்மடங்கு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒமைக்ரான் பரவத் தொடங்கிய தென் ஆப்ரிக்க நாட்டில் உச்ச நிலைக்கு சென்று தற்போது இதன் பாதிப்புகள் பரவலாக குறையத் தொடங்கி உள்ளது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பாதிப்புகள் வரை பதிவாகி வருகின்றன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது அரசு. மேலும், கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற தகவல் பரவியதால் பல்வேறு தரப்பினரும் கலக்கம் அடைந்துள்ளனர். 2020 ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் 2021ம் ஆண்டின் இறுதியில் சற்று மூச்சு விடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பையும் அந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே வாரிச் சுருட்டிக் கொண்டது ஒமைக்ரான் திரிபு வைரஸ். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சுற்றுலா, வாகனப் போக்குவரத்து, ஓட்டல்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொடங்கி சாலையோர வியாபாரிகள் வரை பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்தித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் செய்து கொண்டிருந்த சொந்த தொழிலை விட்டு வேலைக்குச் சென்றதும், சொந்த ஊருக்குச் சென்று கிடைத்த வேலையில் ஈடுபட்டதும் கொரோனாவின் கோர முகங்களில் ஒன்று. அதிலிருந்து மீண்டு தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கும் நேரத்தில் ஓங்கி அடிக்கும் வகையில் ஒமைக்ரான் வந்து இறங்கியது.

ஏற்கனவே உரிய தொழிலாளர்கள் கிடைக்காமல் வடமாநில இளைஞர்களின் வருகையை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சொந்த மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் திரும்பாததால் தொழில் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் பொருளாதார சுழலில் சிக்கி தற்கொலை என்ற அபாய முடிவை எடுக்கும் இறுதி நிலைக்கும் ஆளாகின்றனர்.

இரண்டாவது அலைக்குப் பிறகு பகுதி, பகுதியாக வழங்கப்பட்ட தளர்வுகளை முறையாகப் பயன்படுத்தி உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பாக இருந்தது. அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்பட்டதும் திமுதிமுவென கிளம்பி வந்த வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கட்டவிழ்த்து விட்டதும் சராசரியாக நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கேனும் தொற்று பாதிப்பு பதிவாகி வந்தது. அதனைத் தொடர்ந்து வெளிநாடு, வெளிமாநில பயணங்கள் அடுத்த திரிபு வைரசை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. அதற்காக அனைத்தையும் அடைத்தே வைத்திருக்க முடியாது என்றாலும், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தும் அதை காற்றில் பறக்க விட்டதன் விளைவே தற்போது இன்னொரு ஊரடங்கு என்ற அச்சம் நம்மை பரவத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. ஒரே நாளில் 27,000 பேர் பாதிப்பு, 284 பேர் உயிரிழப்பு!இப்போதும் கூட பொருளாதார சமநிலையில் அடித்திருக்கும் புயலில் இருந்து மீண்டு வருவதற்கான நம்பிக்கையும், திடமும் நமக்கு இருக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கையுடன் நாம் கடைபிடிக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள். பொருளாதார சங்கிலியில் ஏற்படும் உடைப்பு ஒட்டுமொத்தமாக வாழ்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடல், வேலையிழப்பு, அதிக கடன், மருத்துவச் செலவு போன்ற காரணங்களால் அடித்தட்டு முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இதனை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் உறுதுணையாக இருப்பது மட்டுமே கடுமையான பொருளாதார வீழ்ச்சிகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான சிறந்த வழி.

ஒமைக்ரானை தொடர்ந்து டெல்மைக்ரான், இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மற்றும் இன்யுளுயன்சா இணைந்த ப்ளோரானா என அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன வைரஸ்கள். இதிலிருந்து நம்மை காத்துக் கொள்வதும் அதன் பிறகு நம் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் அடுத்தடுத்த ஆண்டுகளில் உள்ள மிகப்பெரும் சவால் ஆகும்.

இந்த சவாலை எதிர்கொள்வதற்கான மன திடத்தையும், வரப்போகும் வைரஸ் பாதிப்புகளில் இருந்து உடல் ரீதியாக நம்மைக் காத்துக் கொள்வதற்கு போதிய உடல் திடத்தையும் பெறுவது தான் உடனடியாக செய்ய வேண்டியவை.
Published by:Karthick S
First published:

Tags: CoronaVirus, Omicron

அடுத்த செய்தி