2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா, சுமார் 2 ஆண்டுகள் பல்வேறு பாதிப்புகளை நம் வாழ்க்கையில் நேரடியாக ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் எல்லா நாடுகளும் கொரோனாவால் வீழ்ச்சியை கண்டுள்ளனர். 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று சற்று குறைந்த போது மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். எல்லோரும் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என்று எண்ணிக்கொண்டு 2021ம் ஆண்டை தொடங்கினோம்.
ஆனால், நாம் எதிர்பார்த்ததை விடவும் மோசமான பாதிப்பை கொரோனா நமக்கு தந்துவிட்டது. உயிர் சேதங்கள் முதல் பொருளாதார இழப்புகள் வரை எல்லாமே வீழ்ச்சி என்கிற நிலையில் சென்றது. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மக்கள் 2022 ஆம் ஆண்டில் தங்கள்து இயல்பு வாழ்க்கையை தொடங்கலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் தற்போது இந்த நவம்பர் மாதத்தில் ஓமைக்ரான் கொரோனா என்கிற புதுவித வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது.
இதனால் 2022 ஆம் ஆண்டும் கடந்த இரு ஆண்டுகளை போன்று மோசமானதாக இருக்குமோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர். ஓமைக்ரான் கொரோனா பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான தடையை ஜப்பான் அரசு விதித்துள்ளது. பல நாடுகளும் தங்களின் எல்லைகளை மூட தொடங்கி விட்டனர். இதனால் மீண்டும் பயணங்கள் தடைபட உள்ளது.
இது நேரடியாக நுகர்வோரையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் பாதிக்க உள்ளது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளை போன்று 2022ம் ஆண்டிலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தால் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும். மேலும் அமெரிக்கா, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள மத்திய வங்கிகளில் வட்டி விகிதம் 10 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தற்போது பரவி வரும் ஓமைக்ரான் கொரோனா வகையானது, டெல்டா வகையை விட எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து தான் அடுத்த ஆண்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்க முடியும். ஒருவேளை இந்த புதுவகை கொரோனா அதிக பாதிப்புகளை உண்டாக்க கூடியதாக இருந்தால் ஊரடங்கு நிலை உலகெங்கும் ஏற்படும். இதனால் வேகமான பணவீக்கம் மற்றும் மெதுவான வளர்ச்சி தேக்கம் ஆகிய பாதிப்பை ஒருங்கிணைத்து உண்டாக்கும்.
கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் நிறுவனமானது, பொருளாதாரம் பற்றிய கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் இருந்தால், உலகளாவிய வளர்ச்சியை 2% விகிதத்திற்கு முதல் காலாண்டில் குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய கணிப்புக்குக் கீழேவும், அதாவது 2.5 சதவீத புள்ளிகள் குறையவும் கூடும். 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியானது 4.2% இருக்கலாம் அல்லது இந்த கணிப்பில் இருந்து 0.4 சதவீதமாக குறையவும் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
சில பொருளாதார நிபுணர்கள் இந்த வீழ்ச்சியானது இதை விடவும் குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகின்றனர். மீண்டும் ஊரடங்கு என்கிற நிலை ஏற்பட்டால் வணிகம் மற்றும் வீட்டு பொருட்களின் தயாரிப்பு சார்ந்த துறைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று நோமுரா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய சந்தை ஆராய்ச்சியின் தலைவர் ராப் சுப்பராமன் குறிப்பிடுகிறார். மேலும் நோய் பரவுதலை சீனா சரியான முறையில் கையாண்டு வருகிறது. இருப்பினும் நோய் பரவல் வீரியமாக இருந்தால் இதன் பொருளாதாரமும் வீழ தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வகை தோன்றுவதற்கு முன்பு, சில பொருளாதார வல்லுநர்கள் பயணம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா போன்ற சேவைகளை நோக்கிய தேவையில் சில மாற்றத்தை முன்வைத்தனர். ஆனால் அந்த பரிந்துரையானது இப்போது தாமதமாகலாம். எனவே 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நிலையானது முன்பை காட்டிலும் மோசமடையவும் வாய்ப்பிருக்கிறது. அதற்கேற்ற வழிமுறைகளை கண்டறிந்து உலக பொருளாதாரத்தை நிலைகுலையாமல் பார்த்து கொள்வதற்காக பல பொருளாதார வல்லுநர்கள் ஆய்வில் இறங்கி உள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.