தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூஸ் 18 -க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் கூறியதாவது-
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுவதுமாக கடைபிடித்து வருகிறோம். தமிழ்நாட்டில் எங்குமே ஒமைக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்படவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்த 2,928 விமான பயணிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பாக, ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்த 18 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், 3 பேருக்கு மட்டும்தான் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாசிட்டிவ் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா உறுதி செய்யப்படுவதற்கும், ஒமைக்ரான் உறுதி செய்யப்படுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு.
கொரோனா சிகிச்சைக்கும், ஒமைக்ரான் சிகிச்சைக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒரே மாதிரியான அணுகுமுறைதான் கடைபிடிக்கப்படும். ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவது என்பது உண்மைதான். ஆனால் லேசான பாதிப்பு மட்டுமே, தற்போது வரைக்கும் அது ஏற்படுத்தி இருக்கிறது.
முதன்முறையாக கொரோனா வந்தபோதும், வீரியம் இல்லாமல்தான் இருந்தது. ஒரு கட்டத்திற்குப் பின்னர் மிகுந்த பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியது. கொரோனாவுக்கும், ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள காலத்துக்கும் வித்தியாசங்கள் உண்டு.
கொரோனா வந்தபோது தடுப்பூசி மற்றும் அதனை எதிர்கொள்ள போதிய தயாரிப்பு இல்லாமல் இருந்தோம். ஆனால் இப்போது, தடுப்பூசி, ஆக்சிஜன், தனிமைப்படுத்தும் மையங்கள் என பல வசதிகள் உள்ளன. இப்போது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
கொரோனாவை எதிர்கொண்ட போது என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்றினோமோ, அதையே இப்போதும் செய்தால் ஒமைக்ரான் வைரசையும் வென்றுவிடலாம்.
விஞ்ஞான ரீதியில் இன்னும் சில காலம் பொருத்திருந்தால் மட்டும்தான் ஒமைக்ரான் வைரஸ் குறித்த முழு விபரங்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.