மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு பங்கு கோரி கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் மறைந்த ஜெயலலிதாவின் தந்தையான ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மாவின் மகன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் சகோதரர் என்றும் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வியாசரபுரத்தைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். “ஜெயலலிதாவின் தந்தை ஆர்.ஜெயராம் எனது தந்தை. ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன்” என்று வாசுதேவன் தனது மனுவில் கூறியுள்ளார்.
மேலும், அந்த மனுவில், தனது தந்தை ஜெயராமால் இரண்டாவதாக திருமணம் செய்யப்பட்ட வேதம்மா என்ற வேதவள்ளிக்கு பிறந்தவர்கள்தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெயலலிதாவும், ஜெயக்குமாரும் எனக்கு உடன்பிறந்தவர்கள் என்றும், 1950ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கோரி அவரது தாயார் ஜெயம்மா மைசூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அவரது தந்தையின் இரண்டாவது மனைவி வேதவள்ளி, அவரது மகன், மகள் ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் அந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். “பின்னர், இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு முன்பே ஜெயக்குமார் காலமானார். ஆகவே, தற்போதைய நிலவரப்படி, நான் ஜெயலலிதாவின் அண்ணன் மற்றும் நேரடி வாரிசு,” என்று அவர் கூறியுள்ளார். எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளில் பாதியை பங்கீடு செய்யவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் மற்றும் மகள் ஜெ.தீபா ஆகியோரை மட்டுமே ஜெயலலிதாவின் முறையான வாரிசுகளாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் 2020ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுபோன்ற மனுக்கள் ஒன்றும் புதிது அல்ல. இதேபோன்ற கோரிக்கையில், கர்நாடகாவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மறைந்த தெலுங்கு நடிகர் ஷோபன் பாபு மற்றும் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அதனை பொய் வழக்கு என்று 2018ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. அதேபோலதான், ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை கோரி தற்போது புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஷோபன்பாபுவின் மகன் என்று கூறிக்கொண்ட கிருஷ்ணமூர்த்தி என்ற 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த நபரின் கூற்றுகள் போலியானது என நிரூபிக்கப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்றம் அந்த இளைஞரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த இளைஞர் தலைமறைவானதால், 10 நாட்கள் தேடுதலுக்குப் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
Also Read | தென் இந்தியாவைச் சேர்ந்த நியமன எம்பிக்கள்… தென்னகத்தைக் குறிவைத்த பாஜக! அமித்ஷா – மோடியின் அடுத்த மூவ்!
சொத்துகள் என்ன?
2019ஆம் ஆண்டு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு ஆஜரான வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞர் ஏ.பி.ஸ்ரீனிவாஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி நான்கு அசையா சொத்துகள் மட்டுமே இருப்பதாகவும், அவை அனைத்தும் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், வருமான வரி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்தது. அதுமட்டுமின்றி, மார்ச் 31, 2016 அன்று ஜெயலலிதா தாக்கல் செய்த வருடாந்திர வருமான வரிக் கணக்கின்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ. 16.37 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை வைத்திருந்தார். ஆனால், டிசம்பர் 31, 2018 நிலவரப்படி அவரது கடன்கள் ரூ.16.74 கோடியாக இருந்தது என நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கூறியது.
வேதா நிலையம்:
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் குறித்த சர்ச்சைகள் சூழ்ந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள வேதா நிலையம் என்ற சொகுசு பங்களா குறித்து பல பிரச்சனைகள் எழுந்தன. இந்த பங்களாவை முதலில் 1967ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் அவரது தாயார் வேதவள்ளியும் ரூ.1.32 லட்சத்திற்கு வாங்கியதாக கூறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில், போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்துவதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கிடையில், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் மற்றும் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோருக்கு ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனுடன், குடியிருப்புக்கான கொள்முதல் விலையாக மாநில அரசு டெபாசிட் செய்த 67.9 கோடி ரூபாயையும் திரும்பப் பெறலாம் என்று நீதிமன்றம் கூறியது. (2020ஆம் ஆண்டு, வேதா நிலைய இல்லத்தை நினைவிடமாக மாற்றத் திட்டமிட்டிருந்த அப்போதைய அதிமுக அரசிடம் வேதா நிலையம் ஒப்படைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது).
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.