Home /News /tamil-nadu /

’பசிங்கிறது எல்லாருக்கும் ஒண்ணுதான்யா...’ பகிர்ந்துண்டு நெகிழ வைக்கும் முதியவர்

’பசிங்கிறது எல்லாருக்கும் ஒண்ணுதான்யா...’ பகிர்ந்துண்டு நெகிழ வைக்கும் முதியவர்

பிச்சை எடுத்து நாய்களின் பசியாற்றும் முதியவர்

பிச்சை எடுத்து நாய்களின் பசியாற்றும் முதியவர்

” ஏதோ ஒரு புண்ணியத்துல கிடைக்கிற சோத்த எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடணும் அதுதான்யா நியாயம், தர்மம்"

சென்னையில் ஊரடங்கால் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் ஒருவேளை உணவுக்கு கூட யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது தான் நிதர்சனமான உண்மை.

கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது இவர்களைத் தேடி உணவு கொண்டுவந்து தருபவர்கள் அரிதாகிவிட்டனர். இந்த சூழ்நிலையிலும் சென்னை அசோக் நகர் பகுதியில் முதியவர் ஒருவரின் செயல் ஆச்சர்யத்தில் உறைய வைக்கிறது.

அசோக் நகரில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் அடியில் கடந்த பல நாட்களாக தன் வாழ்க்கையை கழித்து வருபவர் திருச்சியைச் சேர்ந்த முருகைய்யா. சுமார் 70 வயது மதிக்கத்தக்க இந்த பெரியவர் கோயம்பேடு சந்தையில் ஒரு கடையில் இரவுநேர காவலாளியாக இருந்து வந்துள்ளார்.

தற்போது கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாததால் தங்குவதற்கு வீடும் இல்லாத இவர் அசோக் நகர் பகுதியில் சாலையிலேயே தன் வாழ்க்கையை கழித்து வருகிறார்.
யாரேனும் கொண்டு வந்து கொடுக்கும் உணவு பொட்டலங்கள் தான் இவரது வாழ்க்கையை இன்னமும் இந்த கழித்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறார்.

உணவு மட்டுமல்லாது சிலர் பிஸ்கட் போன்ற பொருட்களையும் கொடுத்து செல்வதாக சொல்கிறார். உணவையும் பிஸ்கட்டையும் பெற்றுக் கொள்ளும் இவர் தினந்தோறும் அந்த பகுதியில் உள்ள சுமார் 10 நாய்களுக்கு அவற்றை பகிர்ந்து தருகிறார்.

அந்த வழியே சென்ற போது எதேச்சையாக இந்த காட்சியை பார்த்த்து  நாம் அவரிடம் நேரில் சென்று பேசினோம். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்... ”பசிங்கிறது எல்லாருக்கும் ஒண்ணுதான்யா, நமக்கு வாய் இருக்கு ஐயா பசிக்குதுன்னு கேக்கலாம், வாயில்லா ஜீவன் என்னய்யா பண்ணும்.

இந்த ஏரியாவுல இருக்குற பலபேர் வீட்டைவிட்டு காலி பண்ணி சொந்த ஊருக்கு போயிட்டாங்க, அவங்க வளர்த்த நாய்கள எல்லாம் தெருவுல வுட்டுட்டு போய்ட்டாங்க.... அதுங்க பாவம், வயித்துக்கு இல்லாம கத்திக்கிட்டே திரியுது.

அதனால தான் எனக்கு கிடைக்கிற சோத்தையும் பிஸ்கட்டையும் வாங்கி வெச்சுட்டு பாதி வயித்த நான் நிரப்பிட்டு மீதி இருக்குற எல்லாத்தையும் இந்த நன்றியுள்ள நாய்களுக்கு கொடுத்துட்டு இருக்கேன். ஏதோ ஒரு புண்ணியத்துல கிடைக்கிற சோத்த எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடணும் அதுதான்யா நியாயம், தர்மம்" என்றபோது இதயம் கனத்தது.

அப்போது காரில் இருந்த சில பிஸ்கட் பாக்கெட்டுகள் ஒரு பொட்டலம் சாப்பாட்டையும் முதியவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து விடை பெற்றோம். தனக்கு கிடைக்கும் பிஸ்கட்டுகளை வெறுமனே தூக்கி வீசுவதில்லை ஒவ்வொரு நாய்க்கும் அவர் ஊட்டி விடுவது தான் அழகு.

Also read... 'லாக்அப்’ மரணம் குறித்து கனிமொழி கூறியது போல தமிழகத்தின் நிலை இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ!

அதுவும் தண்ணீரில் நனைத்து ஒவ்வொரு நாயின் வாயில் வைத்து, அன்போடு பசியாற்றுவது வறுமையிலும் கூட ஈரமுள்ள இதயங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை  நம் கண்முன்னே உணர்த்துவதாக இருந்தது அந்தக் காட்சி.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி