ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சலீம்கான் என்பவர் தனது மாமா ஜபருல்லாவை செஞ்சி அருகே உள்ள குண்டலபுலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி காப்பகத்தில் 2021 டிசம்பரில் சேர்த்திருந்தார். அமெரிக்காவில் இருந்து ஓராண்டுக்கு பின் திரும்பிய சலீம்கான் காப்பகத்திற்கு சென்று பார்க்கையில் அவரது மாமா அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது மாமாவை காணாததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் சலீம்கான். இதையடுத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், தனது மாமா ஜபருல்லாவை மீட்டு தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் சலீம்கான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து காணாமல் போன ஜபருல்லாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதிதொடர்ந்து மாவட்ட ஏடிஎஸ்பி தேவராஜ் தலைமையில் வருவாய் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், அன்புஜோதி காப்பகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணைக்காக அதிகாரிகள் காப்பகத்திற்கு சென்ற போது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்டோரை மிரட்டுவதற்காக அதன் உரிமையாளர் குரங்குகளை வளர்த்து வந்தது தெரியவந்தது.
போலீசார், அதிகாரிகள் என ஏராளமானோரை ஒரே நேரத்தில் கண்டதும் குரங்குகள் ஆக்ரோஷம் அடைந்து அவர்களை விரட்டி, விரட்டி தாக்கி கடித்து குதறியது. இதனால் காயமடைந்த பலர் ரத்தம் சொட்ட, சொட்ட அலறி அடித்தபடி தலைத்தெறிக்க ஓடினர். அரசு அதிகாரிகளும், மருத்துவக் குழுவினரும் குரங்குகளின் அட்டகாசத்தை கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த காப்பகம் 10 ஆண்டுகளாக உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததும், காப்பகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்கள் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகம் கூறப்படுகிறது. காப்பகத்தில் இருக்க வேண்டிய 137 பேரில் 121 பேர் மட்டுமே தற்போது உள்ளதாகவும், காணாமல் போன 16 பேர் என்ன ஆனார்கள்? அவர்களின் கதி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் கப்பக்கத்தில் தங்கி இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காப்பக நிர்வாகி அன்பு ஜூபின் மற்றும் அவரது மனைவி மரியா ஜூபின் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Erode, Mental Health