முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி வாழ்த்து!

முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி வாழ்த்து!

ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும் என்றே கணித்திருந்தன. அதன்படி, நேற்று 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தொடக்கம் முதலே திமுக கூட்டணி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதிமுக கூட்டணி 80 தொகுதிகளை கூட கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

  தொடர்ந்து தேர்தல் முடிவுகளின் படி, தமிழகத்தில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  இதையடுத்து, தமிழகத்தில் 1996-க்கு பின் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. திமுக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்றைய தினம் முதல் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளதால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி இன்று காலை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவர் தன்னுடைய நல்வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

  இதைத்தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  இதேபோல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: