கருணாநிதிக்கு நினைவிடம் என்பது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

 • Share this:
  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு காமராஜர் சாலையில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பரவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.

  இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர்.

  அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது.

  என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர். அவருடைய பெட்டியில் மனோகரா பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படித்துள்ளோம். வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்.” என்று கூறினார்.

  முன்னதாக, இந்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி. 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை, 70 ஆண்டுகள் பத்திரிக்கையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டு கால திமுக தலைவராக இருந்தவர் கருணாநிதி.

  பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கருணாநிதி நின்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்றவர். ஜனநாயகப் பாதையில் இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர். தோல்வி தொட்டதே இல்லை. வெற்றி கைவிட்டதும் இல்லை, அதுதான் கருணாநிதி.

  Must Read : கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  இந்தியாவில் இவரைப் போல யாரும் இருந்ததில்லை என்ற வகையில் இருந்தவர் கருணாநிதி. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து மகத்தான திட்டங்களை, சட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி. நாம் வாழும் தமிழ்நாடு கருணாநிதிக்கு உருவாக்கிய தமிழ்நாடு. கனவு மாநிலத்தையே உருவாக்கியவர் கருணாநிதி.” என்று புகழாரம் சூட்டினார்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: