O PANNEERSELVAM SAYS THAT WE WILL CONSIDER JOINING SASIKALA IN THE ADMK SUR
சசிகலா மீது நன்மதிப்பு உள்ளது... அதிமுகவில் இணைப்பது குறித்து பரிசீலிப்போம் : ஓபிஎஸ் கருத்து
ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா மீது தனக்கு நன்மதிப்பு இருப்பதாகவும் சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வது குறித்து பரிசீலிப்போம் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சசிகலா மீது தனக்கு நன்மதிப்பு இருப்பதாகவும் சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வது குறித்து பரிசீலிப்போம் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், சசிகலாவின் அரசியல் விலகல் அறிவிப்பு தொடர்பான கேள்விக்கு, உள்ளபடியே அவர் அதை நினைத்து சொல்லியிருந்தால் நான் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், இதை சசிகலாவின் பெருந்தன்மையாகவே நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
சசிகலா மீது தனக்கு முதலில் இருந்தே எந்தவித வருத்தமும் இல்லை என்றும், ‘ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் மீது சில சந்தேகங்கள் இருந்தது. ஜெயலலிதா சமாதியில் இருந்தபடி நான் பேசிய பேட்டியில் கூட, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலாவிற்கு கெட்ட பெயர் வரும் சூழல் உள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தி நிரபராதி என்பதை நிரூபித்தால் கெட்ட பெயர் விடுபடும்’ என்று சொல்லியிருப்பதை நினைவுபடுத்தினார். மேலும், சசிகலா மீது தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
சசிகலா மீது, வருத்தமெல்லாம் இல்லை என்றும் ஜெயலலிதாவுடன் இருந்தபோது அவருக்கு தேவையானதை எல்லாம் செய்தார் என்ற நன்மதிப்பு இருப்பதாகவும் கூறிய பன்னீர்செல்வம், அதிமுகவுடன் இணைந்து சசிகலா பணியாற்ற எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, சசிகலாதான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறாரே என்று பதிலளித்தார்.
மேலும், மாற்றக்கூடிய நிலைமை அவருக்கு இருந்தால் அது குறித்து பரிசீலிக்கலாம் என்று கூறிய பன்னீர்செல்வம், அதிமுகவில் அவருக்கு இடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பில்லை என்று சொல்லி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டி, ‘தன்னை பொறுத்தவரையில் நான்கு ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால் ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கின்ற கட்சி அமைப்பை ஏற்றுக்கொண்டால் அவரை இணைத்துக் கொள்வதை பரிசீலிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.