முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். அவர் தேர்தல் பரப்புரை பரபரப்புக்கு இடையே நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டிளித்தார்.
பலமுனை போட்டி நிறைந்த தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
அதிமுக 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை அளித்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்றமான மாநிலமாக கொண்டு செல்வதை உறுதி செய்து இருக்கிறோம். பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பது மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது. மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். யாருடைய ஆட்சி நல்லாட்சி என்பதற்கு மக்கள் பதில் அளிப்பார்கள்.
முதலமைச்சர் வேட்பாளர் வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்ததன் காரணம் என்ன?
எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் சீரான ஆட்சியை கொடுத்திருக்கிறார். ஆகவே அவர் தொடர்ந்து முதலமைச்சராக ஈடுபடுவதை அனுமதித்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவருக்கு அந்த வாய்ப்பை அளித்து உள்ளேன்.
போடி தொகுதியில் உங்களோடு ஒன்றாக பயணித்தவர்கள் இப்போது திமுக, அமமுக சார்பில் எதிரில் போட்டியிடுகிறார்கள்... களம் சவால் நிறைந்துள்ளதா?
அரசியலில் உச்சகட்ட துரோகத்தை அவர்கள் (அமமுக) நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்த உழைப்பின் மூலம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்று வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். திமுகவோடு சேர்ந்து கொண்டு அரசியல் களத்தில், வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல முட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
திமுக 234 தொகுதிகளும் வெற்றி பெறும் என ஸ்டாலின் கூறி வருகிறாரே...?
அவரவர் கட்சிக்கு சாதகமான பதிலை தான் அவர்கள் தெரிவித்து கொள்வார்கள். ஆனால் இறுதியில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் சொல்லும் பதிலே இறுதியானது.