Home /News /tamil-nadu /

ஜெயலலிதா கைரேகை சர்ச்சை.. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

ஜெயலலிதா கைரேகை சர்ச்சை.. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

Jayalalithaa fingerprint : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

    திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் 2016, நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றன. அப்போது ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எம்.ரெங்கசாமி, ஏ.கே.போஸ், செந்தில் பாலாஜி ஆகியோரை மருத்துவமனையில் இருந்தபடியே ஜெயலலிதா தேர்வு செய்ததாகவும், அதற்காக வேட்பு மனுவில் கைரேகை வைத்ததாகவும் அதிமுக அறிவித்தது. ஜெயலலிதாவுக்கு டிரக்கியோஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், கை வீங்கியிருந்ததாகவும், அதனால், கையெழுத்துக்குப் பதிலாக கைரேகை பெறப்பட்டதாகவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில், வேட்பு மனுக்களில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகை தானா என்றும் கைரேகை வைக்கும் போது ஜெயலலிதா நினைவுடன் இருந்தாரா என்று விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில், போட்டியிட்ட சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக வேட்பாளர் போசின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஜெயலலிதா தனது முன்னிலையில் கட்டைவிரல் அடையாளத்தை வைத்ததாக அரசு மருத்துவர் பாலாஜி கூறியது முற்றிலும் தவறானது என்றும் சரவணன் தனது மனுவில் தெரிவித்திருந்தார். 2016 அக்டோபர் 27ஆம் தேதி, யாராவது ஒரு மருத்துவ அலுவலர் ஜெயலலிதாவின் கைரேகையை அங்கீகரித்து அத்தாட்சி அளிக்க அனுமதி வழங்கி தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை படித்ததாக டாக்டர் பாலாஜி தெரிவித்தது தவறானது என்றும் கூறியிருந்தார்.

    தேர்தல் ஆணையத்தின் கடிதங்கள் 28ஆம் தேதி தான் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு முன்பாக கடிதத்தை எப்படி படித்திருக்க முடியும் என்றும் சரவணன் கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நீதிபதி வேல்முருகன், ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்போர்டு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் ஒப்புதல் அளித்திருந்ததால், விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். சொத்து வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருந்த போது எடுக்கப்பட்ட கைரேகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படியும் சிறை கண்காணிப்பாளருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    Read More : அழுதுக் கொண்டிருந்த எனக்கு ஜெயலலிதா தைரியமூட்டினார்... ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

    வாதங்கள் நிறைவடைந்த பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், மாநில அமைச்சர்களோ, மத்திய அமைச்சர்களோ பார்க்க முடியாத ஜெயலலிதாவை அரசு மருத்துவர் பாலாஜி பார்த்து கைரேகை வாங்கினார் என்று நிரூபிக்கப்படவில்லை என்று கூறினார். ஜெயலலிதாவுக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், அவர் சுய நினைவோடு, யோசிக்கும் திறனோடு, நல்ல மனநிலையில் இருந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். ஜெயலலிதாவின் கைரேகை மிகவும் சந்தேகத்துக்குள்ளானதாக இருப்பதால் அதிமுக வேட்பாளர் போசின் வெற்றியையும் ரத்து செய்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார்.

    Must Read : அதிமுகவில் மீண்டும் சசிகலா? ஓ.பன்னீர்செல்வம் பதில்

    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 இடைத்தேர்தல் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தனக்கு தெரியும் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளதுள்ளார்.

    ஜெயலலிதா கைரேகை


    ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்திருப்பதாகத் தெரிவித்தார். ஆறுமுகசாமி ஆணையம் 7 முறை சம்மன் அனுப்பிய நிலையில், பட்ஜெட் தாக்கல் மற்றும் சொந்த காரணங்களால் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arumugasamy commission, Jayalalithaa, O Panneerselvam, Sasikala

    அடுத்த செய்தி