அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது பேசிய மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஆதரவாளர்கள் நேற்று இரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன், தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார். சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனால், அ.தி.மு.கவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அ.தி.மு.கவினரே இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபடும் வாய்ப்பும் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, அக்கட்சியின் பகுதி செயலாளர் பாலசந்திரன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.
அதில், இன்று பிற்பகலில் வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தங்களது கட்சி நிர்வாகிகள் மற்றும் அவர்களின் காரின் மீது கல்வீசி தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தலைமைக் கழக நிர்வாகிகளை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் தீர்மான குழு ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பொன்னையன், செம்மலை, ஆர்.பி உதயகுமார், சி.வி.சண்முகம், வளர்மதி, வைகை செல்வன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நண்பகல் 12.45 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் யாருக்கும் மன வருத்தம் ஏற்படாத வகையில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகி மனு
தீர்மான குழுவின் மூன்றாவது கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் மேகதாது விவகாரம், திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து விவாதித்ததாக கூறினார். மேலும், கட்சி விவகாரங்களை வெளியில் கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.
தீர்மான குழு கூட்டம் நண்பகல் 12.45-க்கு முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து, ஒரு மணியளவில் கட்சி தலைமையகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது, அங்கிருந்த ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், தர்மர், செம்மலை, வைகைச்செல்வன் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, வெளியே வந்த ஓபிஎஸ்-யிடம் ஒற்றைத் தலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தொண்டர்கள் எதிர்பார்த்தது பொதுக்குழுவின் கிடைக்கும் என்று கூறினார்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்திலிருந்து ஜெயக்குமார் வெளியே வந்தபோது, அவரது காரை முற்றுகையிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK