பா.ஜ.கவுடன் கூட்டணி தொடரும் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பன்னீர் செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அ.தி.மு.க சார்பில் திண்டிவனம் அருகே நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது பேசியவர், “ தி.மு.கதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. தி.மு.கவினர் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டனர். மாற்றத்தை விரும்பிய மக்கள் நாம் எடுத்த முடிவுகள் தோல்விக்கு காரணமாயிற்று.

    தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் பா.ஜ.க கூட்டணிதான். இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டோம். சிறுபான்மையின மக்களுக்கு நம்முடம் கோபம் இல்லை. கொள்கை ரீதியாக அவர்கள் பா.ஜ.கவோடு முரண்பட்டு இருந்தார்கள். கொள்கை ரீதியாக அவர்கள் பா.ஜ.கவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது. நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதியில் 20 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது.

    நகரத்தில் 18ஆயிரம் வாக்குகள். ஆனால் எனக்கு 300 வாக்குகள் கூட கிடைக்கவில்லை. இதுதான் தமிழகம் முழுவதும் நடந்தது. கொள்கை ரீதியாக முரண்பாடு இருந்தாலும் அனைவரும் நன்றாக செயல்பட்டோம். உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார். அவருடைய பேச்சு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவந்தனர். இதுதொடர்பாக, அ.தி.மு.க அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் வலியுறுத்தினர்.



    இதுதொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published: