அ.தி.மு.க பொதுக் குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற சூறாவளி கடந்த 8 நாள்களாக சுழன்றடித்து வருகிறது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதை நிறுத்துவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இருப்பினும்,
எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதற்கிடையில், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த பலர் தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறிவருகின்றனர். அதனால், ஓ.பன்னீர் செல்வத்தின் செல்வாக்கு கட்சியில் தொடர்ந்து குறைந்துவருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் உள்ளிட்டோர் தற்போது எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீர்மானக்குழு தயார் செய்த வரைவு தீர்மானத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர். இதேபோல் கட்சியின் வரவு செலவு அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்-யிடம் தீர்மானங்கள் ஒப்படைப்பு..செயற்குழு- பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்: தனியார் மண்டபத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
இந்தச் சூழலில், ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்வதற்கு ஓ.பன்னீர் செல்வம் தயாராகி வருகிறார். முன்னதாக அவரது இல்லத்தில் இருந்து அவருடைய ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடம் புறப்பட்டு சென்றனர். அதனால், அ.தி.மு.கவில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.