அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆவடி காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற் குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் எதிர்வரும் 23-06-2022 அன்று வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை எம்.ஜி.ஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. அ.தி.மு.க தலைமையகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்தப்பட்டது.
இதன் காரணமாக கழகத் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 18-06-2022 அன்று அதே தலைமைக் கழகத்தில் கட்சித் தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இந்தத் தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து, பொதுக் குழுவில் சிறப்பு உறுப்பினர்களை அழைப்பது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.
இதுபோன்ற தருணத்தில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும், அக்கருத்து சிறப்பு அழைப்பாளர்களாக வரும் மூத்த முன்னோடிகளால் கழக வளர்ச்சிக்கு பயன்பட்டது என்றும், இதே மண்டபத்தில் ஜெயலலிதா பலமுறை கழகத்தின் பொதுக் குழுக் கூட்டங்களை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டதாகவும், எனவே 'இடமில்லை” என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமா இருக்காது என்றும், கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
18-ம் தேதி தலைமைக் கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதோடு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனையடுத்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு ட்விட்டர் மூலம் நான் வேண்டுகோள் விடுத்தேன். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம்.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, 23-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளிவைக்கலாம் என்றும், அடுத்தக் கூட்டத்துக்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்று தெரிவித்து 19-ம் தேதி கழக இணை ஒருங்கிணப்பாளருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.
பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - ஓ.பன்னீர் செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கழக சட்டத்திட்ட விதிகளுக்கு மாறாக திருவள்ளூர் மாவட கழகச் செயலாளர் பென்ஜமின் மேற்காணும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பாதுகாப்புகோரி தங்களிடம் விண்ணப்பித்துள்ளார். எங்கள் கழக சட்ட திட்ட விதிகள்படி, சட்ட நடவடிக்கை எடுக்க கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது .
மேலும் 23-ம் தேதி நடைபெறவுள்ள செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தினை தள்ளி வைக்கலாம் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் திருமண மண்டப மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளபடியாலும் பென்ஜமின் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கழகத்திற்கு எதிரான நடவடிக்கையாக என்பதாலும் கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டுமென்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.