எதிர்கட்சித் தலைவர்... தாயின் தலைமகன்... அ.தி.மு.க அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ் ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழுத் தலைவரும் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் அ.தி.மு.க அலுவலக வாயிலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை எழுந்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் இரு தலைமைகளை கொண்டுள்ளதால் யார் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற போட்டி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே எழுந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வண்ணம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்கள் அவரவர் தலைவருக்கு ஆதரவாக மாற்றி மாற்றி கோஷங்களை எழுப்பிக் கொண்டனர். இந்த நிலையில் அன்றைய கூட்டம், அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுக்காமேலேயே நிறைவு பெற்றது. திங்கட்கிழமை காலை மீண்டும் கூட்டம் தொடங்கி அப்போது தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே அவரை எதிர்க்கட்சித் தலைவராக வர்ணித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது ஒருபுறமிருக்க ஏற்கனவே அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்த சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  இப்படியான போஸ்டர்களால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் இரட்டை தலைமை என்றாலே பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும் என்று மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார். அதேபோல சசிகலா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அ.ம.மு.கவின் வேலையாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: