• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் உரிய நேரத்தில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரிப்பு!

தமிழகத்தில் உரிய நேரத்தில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரிப்பு!

தடுப்பூசி

தடுப்பூசி

தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் வருவதற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் குறைந்துள்ளது. குறிப்பாக முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் சில நேரங்களில் இரண்டாவது தவணை தேவையில்லை என அலட்சியமாக உள்ளனர்.

    இதனால், தமிழ்நாட்டில் இரண்டாவது தவணை செலுத்தாமல் உள்ளவர்கள் எண்ணிக்கை 30,42,509 ஆக அதிகரித்துள்ளது. எனவே, இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறும் 6-வது மெகா தடுப்பூசி முகாமில் அவர்கள் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வலுயுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தியிடம் கேட்டபோது, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு தீவிர நோயிலிருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கிறது என்பது உலக அளவில் கிடைக்கும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

    பண்டிகை காலத்தில் கொரோனா நோய் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதால், தகுதி வாய்ந்த அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவது அவசியம் என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பொது மருத்துவத்துறை தலைவர் பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.

    இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தத் தவறியவர்களின் பட்டியலை எடுத்து அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை கண்டறிந்து வீடு வீடாக சென்று நினைவூட்டவும் மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: