மதுவுக்காக குற்ற சம்பவங்களும், மரணங்களும் அதிகரிப்பு...! அரசு நடவடிக்கை எடுக்குமா?

டாஸ்மாக் கடை

  • Share this:
மதுவுக்காக டாஸ்மக் கடைகளை உடைப்பது, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மது தொடர்பான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. சட்டவிரோத மதுவிற்பனை, கள்ளச்சாரயம் தயாரித்தல் தொடர்பாக, கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 50க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு கொரோனாவும், ஊரடங்கும் பிரச்னை என்றால், மது போதைக்கு அடிமையானவர்களுக்கு மதுகிடைக்காததுதான் பெரிய பிரச்னையாக தெரிகிறது. மதுவுக்குப்பதிலாக கையில் கிடைத்தவற்றை அருந்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைவஸ்து கிடைக்கத்தால், சில மதுவெறியர்கள் வீடடங்கவில்லை. டாஸ்மாக் கடைகளை உடைத்து மது பாட்டில்களை திருடும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இதுவரைக்கும், தமிழகம் முழுவதும் 22க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், டாஸ்மாக் கடைகளில் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டிகள் திருடப்பட்டன. இதில் கொடுமை என்னவென்றால், டாஸ்மாக் ஊழியர்களே, அவர்கள் வேலை பார்க்கும் கடைகளில் திருட்டில் ஈடுபட்டததுதான். கடந்த 7ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் உப்போடை டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத மதுவிற்பனையில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. போர்க்களத்தில் பதுங்கு குழி அமைக்கப்படுவதுபோல், கோவில்பட்டி பகுதியில், காட்டுப்பகுதியில், பதுங்கு குழி அமைத்து மது பாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்யப்பட்டதை போலிசார் அம்பலப்படுத்தினர். டாஸ்மாக் கடை ஊழியர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் தற்போது 250 மில்லி லிட்டர் மதுபாட்டில் 700 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்பனையாகிறது. மதுபானமின்றி தவிப்பவர்களை குறிவைத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஊசூரில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பான மோதல் துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது. சாராய விற்பனை தடுத்த இளைஞர் மீது சாரய விற்பனைக் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

சேலம் ஆத்தூரில் போன் செய்தவர்களுக்கு, வீட்டிலேயே கள்ளச்சாராயம் டெலிவரி செய்துவந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்துள்ள கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். 38 ஆயிரம் லிட்டர் சாராய ஊரலையும் போலீசார் அழித்தனர்.

கள்ளச்சாராயத்தை அருந்தியவர் உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் நாயக்கனேரி மலைப் பகுதியில் விற்பனையான கள்ளச்சாராயத்தைக் குடித்த வெங்கடேசன் என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நகர்ப்பகுதியில் வசித்துவரும் போதை வெறியர்கள், மதுவுக்கு பதிலான கையில் கிடைத்தவற்றை போதைக்காகக் குடிக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை கோட்டைபட்டணத்தைச் சேர்ந்த ராஜா என்ற அசன் மைதீன், அருண்பாண்டி, அன்வர் ராஜா ஆகியோர் மது கிடைக்காத காரணத்தால், போதைக்காக கிளாசிக் என்ற முகச்சவரம் செய்த பின்பு பயன்படுத்தப்படும் ரசாயனத்தில் குளிர் பானத்தை கலந்து குடித்தனர். ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அதேபோல், செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பில் வசித்துவந்த பிரதீப், சிவசங்கரன், சிவராமன் ஆகியோர், போதைக்காக பெயிண்டில் கலக்கப்படும், வார்ஷினில் எலுமிச்சை பழம் சாறை கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் வயிற்று வலியில் துடிதுடித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோதும், சிறிது நேரத்தில் பலனின்றி மூவரும் உயிரிந்தனர்.

கோவை சூலூரைச் சேர்ந்த பெர்னான்டஸ் தனியார் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும்போது கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள தனியார் நிறுவனம் சானிடைசர் பாட்டிலை அவருக்கு வழங்கி இருந்தது. குடிபோதைக்கு அடிமையாக இருந்த பெர்னான்டஸ் சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதால், சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து போதைக்காக குடித்து வந்தார். சில நாட்களில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பெர்னாண்டஸ் உயிரிழந்துள்ளார்.

மதுவுக்கு அடிமையானவர்கள் சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர், ஊரடங்கால் மதுபாட்டில் கிடைக்காமல் தவித்துவந்துள்ளார். திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வீர்பத்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

குடிபோதைக்கு அடிமையானவர்கள், ஊரடங்கு சமயத்தில் வெகுண்டெழுவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், ஊரடங்கை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மதுபோதையிலிருந்து வெளியேறலாம் என்ற திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தலாம்.

குடிக்கு அடிமையானவர்கள், குடும்பத்தினரின் உதவியுடன் மீண்டுவருவது சாத்தியம் என போதையில் இருந்து மீண்டவர்கள் கூறுகின்றனர்.

உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று, குடிக்கு அடிமையானவர்களை கடுமையான சோதனைக்குள்ளாக்கியுள்ளது. ஆந்திராவிலும், கேரளாவில் மதுப்பிரியர்களுக்கு தனி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மது அருந்துபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்பதை மாற்ற மாநில அரசு முன்வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
Published by:Vinothini Aandisamy
First published: