• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பூம்புகாரில் மறு தேர்தல் நடத்த வேண்டும் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோரிக்கை..

பூம்புகாரில் மறு தேர்தல் நடத்த வேண்டும் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோரிக்கை..

மாதிரி படம்

மாதிரி படம்

பூம்புகார் சட்டமன்ற தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாம் தமிர் கட்சி வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.

  • Share this:
    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட  திருவாவடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி 175வது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை விட 50 வாக்குகள் அதிகமாக இருந்ததால் நாம்தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான சமாதான பேச்சுவார்த்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன்நாயர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் மற்றும் நாம் தமிழர் கட்சி முகவர்கள் கலந்துகொண்டு திருவாவடுதுறை வாக்குச்சாவடியில் நடந்த பிரச்னைகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    50 வாக்குகள் கூடுதலாக இருந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கவில்லை என்றும், பூம்புகார் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், புகார் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் பேசுகையில், மாதிரி ஓட்டுக்கள் நீக்கப்படாமல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தால் அந்த வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை தினத்தில் கடைசியாக எண்ணி விவிபேடில் பதிவான வாக்குச்சீட்டுகளை எண்ணி ஓட்டுக்களை கணக்கீடு செய்வதற்கான விதிமுறைகளை கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    வாக்குச்சாவடி அலுவலர்களின் கவனக்குறைவால் மாதிரி ஓட்டுக்கள் நீங்கப்பட்டாமல் இருந்திருக்கலாம். வெளிமாநிலத்தை சேர்ந்த பொதுபார்வையாளர் அசோக்பட்டேல் அங்குவந்து ஆய்வுசெய்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல்களை தெரிவித்துள்ளார். அதனால் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது திருவாவடுதுறையில் உள்ள 175வது வாக்குச்சாவடி வாக்குகள் தனியாக எண்ணப்படும்.

    அதன்அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் அதற்காக மறுதேர்தல் நடத்த இயலாது என்றார். இதில் டிஆர்ஓ முருகதாஸ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பூம்புகார் சட்டமன்ற தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்தும், முறைகேடுகள் குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும், பூம்புகார் தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    - செய்தியாளர் : கிருஷ்ணகுமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: