மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில், தமிழகத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை நாமக்கல் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் பிடித்துள்ளனர்.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி நடைபெற்ற மறு தேர்வையும் சேர்த்து, நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
இன்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வரும் என தகவல் வெளியானது. ஆனால், 4.30 மணியளவில் ntaneet.nic.in என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளம் முடங்கியது. இதையடுத்து, பல்வேறு குழப்பங்களுக்கு இடையே மாலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதற்கான இணையத்தில் பத்து இலக்க எண்ணை பதிவிட்டு, பாதுகாப்பு குறியீட்டு எண்ணையும் பதிவிட முடிந்தது.
தமிழகத்தில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ, மாணவியர் பிடித்தனர். அதன்படி திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளதுடன், தேசிய அளவில் 4-வது இடம் பிடித்துள்ளார்.
மேலும், சேலத்தை சேர்ந்த மோகனபிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், தருமபுரியை சேர்ந்த அரவிந்த் 691 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.