ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தான் படித்த பள்ளிக்கு சென்று நினைவுகளை அசைபோட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தான் படித்த பள்ளிக்கு சென்று நினைவுகளை அசைபோட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

ஸ்டாலின்

ஸ்டாலின்

நாம் படித்த சேத்துப்பட்டு ஸ்கூலுக்கு நாளைக்குப் போக போகிறோம் என்று நேற்று இரவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். இன்னும் சொல்லவேண்டுமென்றால், அந்த மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு இயன்ற உதவிகளை வழங்கும் நோக்கில், ஓர் அமைப்பு உருவாக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பள்ளியில் பயின்றவர் என்பதால், அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பேசிய அவர் பேசியதாவது: -

நாம் படித்த சேத்துப்பட்டு ஸ்கூலுக்கு நாளைக்குப் போக போகிறோம் என்று நேற்று இரவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். இன்னும் சொல்லவேண்டுமென்றால், அந்த மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை.  சாதாரணமாக நான் தூங்குவதே 2 மணி 3 மணிக்குதான். அந்த தூக்கம் கூட சுத்தமாக இல்லாமல், படித்த பள்ளிக்கு போகப் போகிறோமே  என்கிற அந்த உணர்வோடு நான் இரவு முழுவதையும் கழித்தேன். ஏனென்றால், மாணவர் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளி காலம்தான் அதை மகிழ்ச்சியோடு நாம் கழித்திருக்கிறோம். அத்தகைய பள்ளிக்கூடத்தில் எப்படி எல்லாம் துள்ளி திரிந்தோம், அதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன்.

வீட்டிலிருந்து ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரி வரைக்கும் நடந்து வந்து 29சி என்கிற பல்லவன் போக்குவரத்து கழக பஸ்ஸை பிடித்து, அந்த பஸ்ஸில் ஏறி, ஸ்டெர்லிங் ரோடில் வந்து இறங்கி, ஸ்டெர்லிங் ரோட்டிலிருந்து ஸ்பர்டாங் ரோட்டிற்கு நடந்து வரவேண்டும். குறைந்சபட்சம் ஒரு 3 அல்லது 4 கிலோமீட்டர் இருக்கும். அங்கிருந்து நடந்துதான் வருவேன். அதெல்லாம் பழைய நினைவு.  அப்படித்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு நான் வந்து சென்றேன். அதுதான் என்னுடைய உண்மையான இயல்பு.

அதேமாதிரி தான் இப்போதும் இங்கே நான் முதலமைச்சராக வரவில்லை என்று சொன்னேன். உங்கள் நண்பராகத் தான் வந்திருக்கிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், செக்கியூரிட்டி எல்லாம் மட்டும் இல்லையென்றால், அதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்றால், நிச்சயமாக நான் பஸ்ஸிலேயோ சைக்கிளிலோ  இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன். ஆனால், செக்கியூரிட்டி விட மாட்டார்கள். அது உங்களுக்கு தெரியும். இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் உங்களோடு பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

இன்றைக்கு முதலமைச்சர் என்கின்ற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். எங்கே படித்தோம். எந்த வாத்தியாரிடம் அடி வாங்கினோம். பென்சில் வாங்க எங்கே போனோம். எங்கெங்கெல்லாம் விளையாடினோம் என்பதையெல்லாம் அன்றைக்கு நாம் பகிர்ந்துகொண்டோம். 6-ஆம் வகுப்பில் நான் முதன்முதலில் சேர்ந்தேன். போனமுறை வந்திருந்தபோது அந்த அறைக்கு அழைத்துக் கொண்டு சென்று அங்கே இருக்கக்கூடிய நாற்காலியில் உட்கார வைத்து நம்முடைய இப்போது இருக்கின்ற தலைமையாசிரியர் அழகு பார்த்தார். அதற்குப் பிறகு 7-ஆம் வகுப்பையும் பார்த்தேன். இப்போது அந்த இடமெல்லாம் கிண்டர் கார்டனாக மாறியிருக்கிறது. ஓரளவுக்குத்தான் மாறியிருக்கிறதே தவிர மற்றபடி முன்னால் இருந்தபடி தான் பராமரித்துக்கொண்டு வருகிறீர்கள். என் மனசுக்குள்ளே என் வகுப்பறை எப்படி இருக்கிறதோ அதுபோலதான் இப்போதும் இருக்கிறது. இங்கே பழைய நண்பர்களையெல்லாம் நான் பார்க்கிறேன். நம்முடைய முன்னாள் தமிழாசிரியர் அய்யா ஜெயராமன் மிகப் பெருமையோடு அனைத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது எல்லாம் இந்தப் பள்ளியின் சார்பில் சில நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துவதுண்டு. அப்போது நன்கொடை வசூல் செய்வார்கள். என்னிடத்தில் தான் புக்கை கொடுத்துவிடுவார்கள். அப்போது பள்ளிக்கு எனக்கு லீவு கிடைத்துவிடும். அந்த நன்கொடை சீட் எடுத்துக் கொண்டு பல பெரிய தொழிலதிபர்கள், குறிப்பாக அன்றைக்கு பிரபலமாக சினிமாவில் மின்னிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஆகியோரிடத்தில் சென்று நான் நன்கொடை வாங்கி கொடுத்திருக்கிறேன். அதனால் அதற்காகவே எனக்கு லீவு கிடைக்கும் என்பதற்காக நான் வசூலில் அதிகம் ஈடுபடுவதுண்டு.

இதையும் படிங்க: நுழைவுத்தேர்வில் பெயில்... மேயர் சிபாரிசில் சீட் வாங்கி படித்தேன்... மு.க.ஸ்டாலின் பள்ளி நினைவுகள்!

இதேபோல ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தப் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19-ஆம் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்கள் வழங்கக்கூடிய நிதியின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய இருக்கிறோம். இதனை செய்து தருவது அரசாங்கத்தினுடைய கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது.  அதையும் புரிந்துகொண்டு மக்களும் சேர்ந்தால்தான் அதை நிறைவேற்றமுடியும். வெற்றிபெற முடியும்' என்று பேசினார்.

First published:

Tags: MK Stalin