• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தொடங்கியது வடகிழக்கு பருவமழை : இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தொடங்கியது வடகிழக்கு பருவமழை : இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை

மழை

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நெல்லையில் திங்கட்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. மதுரை மாவட்டம் மேலூர், அழகர்கோவில், வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலவளவு பகுதியில் பலத்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள சோமகிரி மலையில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து சுற்றியுள்ள கிராமங்களை சூழ்ந்தது. இதனால் இங்குள்ள பரம்புக்கண்மாய் 16 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

  சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பெண் உட்பட 5 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறியபோது பாறை வலுக்கியதில் இரண்டு இளைஞர்கள் ஆற்றில் தவறி விழுந்தனர். அதன் பினனர் அந்த இரண்டு இளைஞர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் பிழைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

  ஆந்திராவில் பிச்சாட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதை அடுத்து ஆரணி ஆற்றில் 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி கரையோரம் இருக்கக்கூடிய 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டியிருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வடகடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read : தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் - மா.சுப்பிரமணியன்

  மேலும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் செவ்வாய்க்கிழமை (இன்று) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் என்றும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: