பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துவரும் சூழலில், பள்ளிகளில் பிரச்சனைக்குரிய மாணவர்களை கண்டறிந்து ஆலோசனைகள் வழங்க கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மைக் காலங்களாக பள்ளி வளாகங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குவது, திட்டுவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் காலையில் பள்ளிக்கு வருகின்ற போதும் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போதும் பேருந்துகளில் மாணவர்கள் வரம்புகளை மீறி ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்வதும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இத்தகைய மாணவர்களின் செயல்பாடுகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனை தடுக்கின்ற வகையில் பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளி வளாகங்களில் பிரச்சினைக்குரிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கவும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்கவும் கண்காணிப்பு அலுவலர்களை பள்ளிக்கு ஒன்று வீதம் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 39 விநாடிகளில் கட்டைவிரலால் 108 ஓடுகளை உடைத்து கடலூரில் கராத்தே மாணவர் சாதனை
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் முடிவை வரவேற்கின்றனர். தினசரி பேருந்துகளில் பயணம் செய்கின்றபோது பொதுமக்களுக்கும் படியில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதனை தடுக்க வேண்டியது அவசியம் என்கிற கருத்த மாணவர்கள் தரப்பு முன்வைக்கிறது.
இதையும் படிங்க: கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் பள்ளி மாணவர்கள்.. பழனி பேருந்து நிலையம் அருகே பரபரப்பு
இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் மாணவர்களின் ஒழுக்கத்தை பாதிப்பதாக தெரிவிக்கின்றனர். உரிய கலந்தாலோசனை மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தெரிவிக்கும் ஆசிரியர்கள் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மாணவர்களை தவறான பாதையில் இருந்து மீட்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.