இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை - புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

 • News18
 • Last Updated :
 • Share this:
  விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியுள்ளார்.

  கடந்த மக்களவை தேர்தலின் போது புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை ஏற்று, பட்டியல் பிரிவில் உள்ள 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வெளாளர் என்று அரசாணை வெளியிட ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

  இந்த குழுவின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிப்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

  இன்று நாங்குநேரியில் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரசாரம் செய்கையில் புதிய தமிழகம் கட்சியின் கொடியும் இருந்தது. இதனால், அக்கட்சியினர் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி, கோரிக்கையை நிறைவேற்றததால் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று கூறினார்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:

  “2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.இ.அ.தி.மு.க.வுடன்  கூட்டணி பேச்சுவார்த்தைக்கு  அக்கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் அன்பிற்குரிய ஜெயலலிதா அவர்களிடம் பேசியபோதே, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளைத்  தான் முன்வைத்தோம். அப்போது அவற்றை ஏற்றுக்கொண்ட  அவரும்  தேர்தல்  முடிந்த பிறகு வாக்குறுதியை காப்பாற்றவில்லை. 2012-ஆம் தேதி சங்கரன்கோவில்  சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, புதியதமிழகம்  கட்சியின் ஆதரவைப்பெற வேண்டும் என்பதற்காக, சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும்’ என்று ஜெயலலிதா அளித்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

  அதேபோல எடப்பாடி பழனிச்சாமி அரசும் கடந்த  நாடாளுமன்றத் தேர்தலின் போது நமக்கு  அளித்தவாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்பதை புதிய தமிழகம் கட்சி வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது. தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையில் புதிய தமிழகம் கட்சி உறுதியாக  இருக்கிறது. நாங்குநேரியில் துவங்கி தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் தேவேந்திரகுல மக்கள்தங்களுடைய இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி, எடப்பாடி அரசு கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

  இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தேவேந்திரகுல  வேளாளர் மக்களுடைய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டுஅம்மக்களின் கோரிக்கை நிறைவேறும் வரையிலும் புதியதமிழகம் கட்சி  தேவேந்திரகுல மக்களுக்கு தோளோடு தோள் நிற்கும் என உறுதி பூணுகிறது. அடையாள மீட்பு அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் இல்லையேல் நாங்குநேரி  மற்றும் விக்கிரவாண்டியில் ஆதரவு இல்லை என்ற  தேவேந்திரகுல மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில், 'நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில்  அ.இ.அ.தி.மு.க.  வேட்பாளர்களுக்கு  ஆதரவு அளிப்பது இல்லை’ என புதிய தமிழகம் கட்சி முடிவு செய்கிறது. அதேபோன்று வேறு எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்பதையும் புதிய தமிழகம் கட்சி தெளிவுபடுத்துகிறது.”

  Published by:Sankar
  First published: