வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் மிதமானது முதல், பலத்த மழை வரை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை அக்டோபரில், 173 மில்லி மீட்டர், நவம்பரில், 117.7, டிசம்பரில், 65.4 என மொத்தம், 356.10 மில்லி மீட்டர் தான் பெய்யும். இது இயல்பான பருவமழையின் அளவாகும்.
இந்த காலகட்டத்தில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, திருச்சியில் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மாநகரப்பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு இயல்பை விட வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி புறநகர்ப்பகுதிகளில் பெய்யும் மழை ஆங்காங்கே உள்ள காட்டாறுகள் மற்றும் நீர்நிலைகள் வழியாக அரியாறு, கோரையாறுகள் வழியாக வந்து திருச்சி புத்துார் ஆறுகள் கடந்து குடமுருட்டி ஆறு வழியாக காவிரியில் கலக்கும். இந்த வழித்தடத்தில் இயல்பான மழையின் போது ஓடிவரும் மழைநீரால் எவ்வித பிரச்னையும் இல்லை.
அதேநேரத்தில், மழை அதிகமாக பெய்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால்தான் பெரும் சிக்கல் ஏற்படும்.
நீர்வழித்தடத்தில் உள்ள வயல்வெளிகள் பெரும்பான்மையானவை மாநகரின் விரிவாக்கப்பகுதிகளாக மாறி, வீடுகளாக நிறைந்துவிட்டன. குறிப்பாக மாநகரில் கருமண்டபம், வயலுார் சாலை, உறையூர் லிங்க நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், விரிவாக்கப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ள நீர் புகுந்து விடுகிறது.
இதுகுறித்து உறையூர் லிங்க நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் சிவக்குமார் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ள காலத்தில் எங்களுக்கு இரவில் தூக்கம் இல்லை. எப்போது வெள்ளம் வரும் என்கிற அச்சத்திலேயே இருக்கிறோம்.கடந்த, 1977ம் ஆண்டு கோரையாற்றில் வந்த பெருவெள்ளம், குடமுருட்டி ஆற்றின் இருகரைகளையும் அடித்துச் சென்றுவிட்டது. இதையடுத்து கிழக்குக் கரை மட்டுமே சீரமைக்கப்பட்ட நிலையில், மேற்கு கரையை பலப்படுத்திமல் விட்டு விட்டனர்.
மேலும், குடமுருட்டி வாய்க்காலில் வந்து கலக்கும் கொடிக்கால் வாய்க்காலுக்கு இருகரைகளும் இல்லை.
இதனால், உறையூர் லிங்க நகர், மங்கள நகர், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட மாநகரத்தின் விரிவாக்கப் பகுதிகளில், ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள அபாயத்தை எதிர் கொண்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை மட்டுமல்லாது, காவிரியில் எப்போதெல்லாம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறதோ அந்த தண்ணீர், குடமுருட்டி ஆறு வழியாக ஏறி, குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை, பல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
ஆனால், உறையூர் வெக்காளியம்மன் கோயில் துவங்கி, தில்லைநகருக்குள் வெள்ளம் புகுந்தால், ஆயிரம் கோடியில் செய்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் எல்லாம் நாசமாகி விடும். எனவே, இந்த முறையாவது போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு, மேற்குக் கரை அமைப்பதோடு, கொடிங்கால் வாய்க்கலை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க...தீவிரமடையும் பருவமழை: ’24 மணிநேரமும் அணைகள் கண்காணிக்கப்படுகின்றன’ - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
மேலும்,காவிரி, கொள்ளிடம் உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி, அரியாறு போன்ற ஆறுகள் திருச்சி மாநகரத்தோடு பின்னி பிணைந்துள்ளன.
இவற்றிலும் பல இடங்களில் வடிகால் வாய்க்கால்களிலும் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஆக்கிரமிப்புகளால் வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்து விடுகின்றன. பல வடிகால் வாய்க்கல்களைத் தூர்த்து கட்டடங்களை கட்டியுள்ளனர்.
உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும் என்கிறார்கள் மாநகரவாசிகள்.
மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், பொதுப் பணித்துறையினர் ஒருங்கிணைந்து வரும் முன் காப்பார்களா? என்பது திருச்சி மக்களின் கேள்வியாக உள்ளது.