3 மாதமாக சம்பளம் தரவில்லை என
சென்னை மேயர் முன்பு ஆயுஷ் மருத்துவமனை ஊழியர்கள் முட்டி போட்டு கெஞ்சியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணியில் மாநகராட்சி சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் துவக்கிவைத்தார். உடன் துணை மேயர், வேளச்சேரி எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர்.
தொடர்ந்து முகாமில் அமைக்கப்பட்டிருக்கும் பரிசோதனை மையங்களை பார்வையிட்ட மேயர் பிரியா ராஜன், பள்ளியின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை மருத்துவ மையத்திற்கு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இருவர் திடீரென மேயரின் முன்பு மண்டியிட்டு காலில் விழுந்து "தாங்கள் ஆயுஷ் மருத்துவமனை தொடங்கியது முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக மருத்துவம் சாரா பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம்.
Read More : 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: அண்ணாமலை
கடந்த டிசம்பர் மாதம் முதல் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் தங்களது சம்பளத்தை கொடுக்கவில்லை. எங்களுக்கு கொடுக்க வேண்டிய 10,500 ரூபாய் சம்பளத்தில் 8,500 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்.
நியாயம் கேட்டதால் மூன்று மாதமாக சம்பளம் தரவில்லை, நீங்கள் வேலையில் இருக்க வேண்டுமென்றால், எங்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டுமென மிரட்டுவதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனிடம் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, அவர்களிடம் விவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட மேயர் பிரியா ராஜன், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அங்கிருந்து சென்றார்.
புதிதாக பொறுப்பேற்ற சென்னை மேயரின் காலில் விழுந்து ஊதியத்தை கேட்ட சம்பவம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ப.வினோத்கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.