• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • NEET Exam : நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி

NEET Exam : நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி

பாலகுருசாமி

பாலகுருசாமி

நீட் தேர்வுக்கு முன்பு பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வந்தனர். இப்போது ஒரே தேர்வு மட்டும் நடைபெறும் என்பதால் மாணவர்களுக்கு பணம், நேரம், அவர்களின் கடின உழைப்பு மீதமாகிறது.

  • Share this:
தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவர்கள் தங்களின் சொந்த நலன்களுக்காக நீட் தேர்வு குறித்து தவறான பிரசாரம் செய்து வருவதாகவும், அவர்களின் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி நீட் தேர்வு குறித்து நீண்ட அறிக்கை ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. உச்ச நீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு வேண்டும் என்று உறுதி செய்துவிட்டன. எனவே நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது. ஆனால் சில அரசியல் தலைவர்கள் தங்களின் சுய லாபத்துக்காக நீட் தேர்வு குறித்து தவறான பிரசாரங்களையும், உறுதிமொழிகளையும் வழங்கி வருகின்றனர். அதற்கு பொதுமக்களும், பெற்றோர்களும் இரையாகிவிட வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தத் தலைவர்கள் அரசியல் நோக்கத்துக்காக அவ்வாறு பேசுகின்றனர் அல்லது நீட் தேர்வின் சரியான நோக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இதன் மூலம் அந்தத் தலைவர்கள் மருத்துவக் கல்வியின் தரம், நுழைவுத் தேர்வுகளின் அவசியம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் என்பது தெளிவாகிறது.

உலகம் முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளில் ஒன்றாக நுழைவுத் தேர்வு உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பல்வேறு வகையான பாடத்திட்டங்களைப் படித்து வரும் மாணவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தரத்தை உறுதி செய்ய நுழைவுத் தேர்வு அவசியமாகும்.

நீட் தேர்வுக்கு முன்பு பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வந்தனர். இப்போது ஒரே தேர்வு மட்டும் நடைபெறும் என்பதால் மாணவர்களுக்கு பணம், நேரம், அவர்களின் கடின உழைப்பு மீதமாகிறது. நீட் தேர்வு என்பது பாஜக அரசின் திட்டமல்ல. 2005-2006 இல் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்டதாகும். இதனால் தமிழக மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மேலும் அது இட ஒதுக்கீட்டையோ, சமூக நீதியையோ பாதிக்கவில்லை.

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கடினமானது என்று பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக மாணவர்கள் திறமையானவர்கள். சமச்சீர் கல்வியால் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணித பாடங்கள் நீர்த்துப்போயின. தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலின் தரத்துக்கு குறைவாக தமிழக மாணவர்களின் பாடத்திட்டங்கள் இருந்ததாலும், பல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படாமல் 12 ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்பட்டதாலுமே நீட் தேர்வு நமது மாணவர்களுக்கு கடினமானதாக இருந்தது. தற்போது பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுவிட்டதால் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர்.

Must Read : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு: இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார்

நீட் தேர்வுகள் தனியார் பயிற்சி மைய கலாசாரத்தை ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டு முழுவதும் சரியானது அல்ல. ஏனெனில் தனியார் பயிற்சி மைய கலாசாரம் நீட், ஜேஇஇ தேர்வுகள் வரும் முன்பே இருந்து வந்த ஒன்றுதான். அதேபோல் நீட் தேர்வு தற்கொலைகளைத் தூண்டுவதாக தவறான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மாணவி அனிதா நீட் தேர்வு முடிவு வந்த உடனேயே தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் தேர்வு செய்வதற்கு பல நல்ல வாய்ப்புகள் இருந்தன.

ஆனால் சுயநலனுக்காக அவர் தூண்டப்பட்டு உச்ச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அதனால் ஏற்பட்ட அவமானங்களே அவரை தற்கொலைக்குத் தூண்டின. நாட்டிலேயே நீட் தேர்வை தமிழ்நாடு மட்டுமே எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. எனவே மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகி, உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: