சசிகலா மீது யாரும் வீண்பழி சுமத்தவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

சசிகலா மீது யாரும் வீண்பழி சுமத்தவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்று அமைச்சர் கடம்பூராஜூ தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட வருத்தத்தில் உள்ளார் மு.க. ஸ்டாலின் இருப்பதாகவும், அதிமுக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வருவதால் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் பேசி வருவதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 3-வது முறையாக அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வெள்ளாளங்கோட்டை, வலசல்பட்டி பகுதிகளில் இன்று காலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வெளி ஜீப்பில் நின்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் கருத்து கணிப்புகள் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதால் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார். அதிமுக 138 இடத்தில் வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பு வந்துள்ளதால் மு.க.ஸ்டாலின் பதட்டத்தில் பேசி வருகிறார். 118 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  சேர்ந்து முதல்வரைத்  தேர்ந்தெடுப்பார்கள். இதில் பாஜக எப்படி வரமுடியும்?

மு.க.ஸ்டாலின் தேவையில்லாத கருத்தை, கொஞ்சம் கூட சிந்தனை இல்லாமல் கூறி வருகிறார். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எவ்வித சந்தேகமும் எங்களுக்கில்லை. இயற்கையாகவே உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலிதா மருத்துமனையில் இருந்தார். அன்றைக்கு முதல்வராக இருந்தவர்  ஓ.பன்னீர்செல்வம். ஆகையால் சசிகலா பற்றிஅவர் சொல்லிய கருத்து சரிதான். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. ஆகையால் ஜெயலலிதா மறைந்துவிட்டார். பல்வேறு விமர்சனங்கள் வந்த காரணத்தினால், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.  முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை யார் மீதும் வீண் பழி சுமத்தவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா உடனிருந்து கவனித்துக் கொண்டார்கள். அதில் மாறுபட்ட கருத்து இல்லை. இதை தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அதிமுகவில் சசிகலா இணைப்பது பற்றி முதல்வரும், துணை முதல்வரும் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் குற்றச்சாட்டு கூறினால் தான் கவலைப்பட வேண்டும் .

அதுதவிர எதிர்க் கட்சிகள் கூறுவது பற்றி கவலை இல்லை. எதிர்க்கட்சியினர் எங்களைப்பற்றி குறை தான் சொல்வார்களே தவிர பாராட்டு பத்திரம் வழங்க மாட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று  மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உடன்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி விமானம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள், மாநில அரசின் ஒத்துழைப்போடு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் இந்தியாவிலேயே தலைசிறந்த மூன்றாவது துறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சரக்குகளை கையாளுவதில் சிறப்பு முனையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள், வரலாற்று திட்டமான தாமிரபரணி, வைப்பாறு திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை வேம்பார் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

மேலக்கரந்தையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரோ பாஸ் நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் தேவையான இடங்களில் 500 கோடி ரூபாய்க்கு மேலாக துண்டில்  வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சித் திட்டங்கள் மு.க.ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லையா? ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மு.க.ஸ்டாலின் வருத்தத்தில் உள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தது திமுக. அதனை விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்தது திமுக. அதிலிருந்து வந்த வருமானம் நின்று போய்விட்டது என்ற வருத்தத்தில் குறைகளை சொல்லி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை தூண்டி விடப்பட்டு மக்கள் பலியானார்கள். அது விரும்பத்தகாத சம்பவம். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடிய அரசு அதிமுக அரசு. நான் பணத்தை குவித்து வைத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

இதனை மு.க.ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும். வேட்புமனுத் தாக்கலின் போது மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு காட்டி இருக்கிறார். அவர் என்ன தொழில் செய்கிறார். 2011ல் காட்டிய சொத்து மதிப்பை விட தற்போது எனது சொத்து மதிப்பு ஒரு சதவீதம் தான் அதிகம். தமிழகத்திலேயே குறைவான சொத்து மதிப்பு  உள்ள வேட்பாளர் நான்தான். எதிர்க்கட்சிகள் எங்களை குறை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும். உண்மையில் எதிர்க்கட்சிகள் மனசாட்சிப்படி எங்களை பாராட்ட வேண்டும்.

கோவில்பட்டியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பை முதல்வரை அறிவிக்க வலியுறுத்துவேன். நிச்சயமாக அறிவிப்பார். நாளைக்கு பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பு இதுவரை செய்த பணிகள், இனி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்துள்ளார். வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர் முதல்வர்’ என்று தெரிவித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: