கோபிச்செட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் கனகாம்பாள் (80). இவருடைய மகள் சாந்தி (60) தனது கணவர் மோகனசுந்தரத்துடன் (74) தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர்களுக்கு சரவணக்குமார் என்ற மகனும், சசிரேகா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று விட்டார். உடல்நிலை சரியில்லாத மகன் சரவணக்குமாரை தாய், தந்தையே கவனித்து வந்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த மோகன சுந்தரம் ஓய்வு பெற்றுவிட்டதால், வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது. கோயில் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து இவர்கள் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வந்தனர்.
இந்த நிலையில் குமணன் வீதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் அவரது கணவர் மோகனசுந்தரம் ஆகிய இரண்டு பேரும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரின் உடலையும் மீட்ட காவல்துறையினர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பணம் இல்லை எனவும், அருகில் இருப்பவர்களிடம் கேட்கவும் மனம் வராததால் வீட்டுக்குள்ளேயே உடலை வைத்திருந்ததாக சாந்தி தெரிவித்துள்ளார். மேலும், கணவர் இறந்து 7 நாட்களும், அம்மா இறந்து இரண்டு நாட்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Humanitarian