திருச்சியில் தபால் வாக்களிக்க தனி நபர் இடைவெளியின்றி குவிந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்

திருச்சியில் தபால் வாக்களிக்கு தனி நபர் இடைவெளியின்றி குவிந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்...

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மெல்ல அதிரித்து வருகிறது. இந்நிலையில்  இது போல் பாதுகாப்பின்றி கூடி வாக்களிப்பது கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும்  தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் அந்தந்த தொகுதிகளில் 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதன்படி, திருச்சி மேற்கு தொகுதிக்கான பயிற்சி வகுப்பு தேசியக் கல்லூரியில் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்திலேயே தபால் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பயிற்சியில் பங்கேற்க வந்துள்ள ஆசிரியர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் தங்களுடைய தபால் வாக்கினை அளிக்க ஒரே இடத்தில்  கூட்டமாக திரண்டனர். பலரும் முகக் கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாமலும் முண்டியடித்துக் கொண்டு குவிந்தனர்.

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மெல்ல அதிரித்து வருகிறது. இந்நிலையில்  இது போல் பாதுகாப்பின்றி கூடி வாக்களிப்பது கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பயிற்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இதே போல் முதல் நாளான நேற்றும் தபால் வாக்களிக்க உரிய வசதி மற்றும் ஏற்பாடுகளை செய்யவில்லை என்று அதிகாரிகள் மீது குற்றச்சாட்டியுள்ளனர். குறிப்பாக, நேற்றைய தினம் 10 மணிக்கு தொடங்க வேண்டிய தபால் வாக்களிக்கும் பணி, உரிய ஏற்பாடுகள் செய்யப்படாததால், ஒன்னரை மணி நேரம் தாமதமாக 11.35க்கு தொடங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் தேர்தல் பணிக்கு கட்டாயப்படுத்தப்பட்டு, பணிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம்  அனுப்பினர். மேலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு, எஸ்.பி ராஜன், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தேர்தல் அல்லாத பணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் முசிறி  அதிமுக வேட்பாளர் செல்வராஜ் காரில் இருந்த  ₹ 1 கோடி ரொக்கம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த 23ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உரிய நடவடிக்கை எடுக்காததால் மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க... லியோனி பேசிய கருத்துக்காக மன்னிப்பு கேட்ட திமுக வேட்பாளர்

இப்படி,தேர்தல் பணியில் மாவட்ட நிர்வாகம், குறிப்பாக வருவாய்த்துறையினரின் செயல்பாடு தொடர் குளறுபடியாக உள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதிதாக இன்று பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: