நிவர் புயலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், சென்னை கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரை பகுதிகளில் அலைகள் ஆவேசத்துடன் கரையை வந்து மோதுகின்றன.
பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. காவல்துறை எச்சரிக்கையை மீறி, கடல் சீற்றத்தை புகைப்படம் எடுக்க மக்கள் கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேநேரம் வீடு இல்லாத ஒருசிலர், கடற்கரையில் சிறு சிறு கூடாரங்கள் அமைத்து அங்கேயே தங்கி இருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரை கிராமமான கோரை குப்பத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனிடையே மீனவர்களின் வலைகள் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் கவலைக்கு உள்ளாகினர்.
Also read: நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை மேலும் 21 ரயில்கள் ரத்து..
அதேபோல், கடலூரிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 49 மீனவ கிராமங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். காரைக்காலில் இருந்து கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் திரும்பும்போது, காரைக்கால் கடல் பகுதி சீற்றமாக இருந்த காரணத்தால் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் கடற்கரைக்குத் திரும்பியுள்ளனர்.
இதனிடையே, காரைக்காலில் இருந்து புயல் அறிவிப்புக்கு முன்னதாக கடலுக்குச் சென்ற மீனவர்களில் இருநூறுக்கும் மேற்பட்டோர், இன்னும் கரை திரும்பாதது உறவினர்களை கவலைகொள்ள வைத்துள்ளது. புயலுக்கு முன்னதாக காரைக்காலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் சென்றன. இந்நிலையில், இன்று அதிகாலை 25-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் திரும்பியுள்ளனர். 10 படகுகள் அருகமை துறைமுகங்களில் தஞ்சமடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் விவேகானந்தர் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள என்.கே.டி. பள்ளி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்தது. அப்போது சாலையில் நடந்துசென்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Nivar, Nivar