Home /News /tamil-nadu /

தமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை..

தமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை..

நேற்று இரவு முதல் சென்னையில் பெய்த மழை

நேற்று இரவு முதல் சென்னையில் பெய்த மழை

சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்தது.

    சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, போரூர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. தேனாம்பேட்டை, திருவான்மியூர், அடையாறு, தியாகராயநகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு இடி, காற்றுடன் தொடங்கிய மழை, அதிகாலை வரை நீடித்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. சாலையில் தேங்கிய மழைநீரால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதேபோல், சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    நுங்கம்பாக்கத்தில் அதிக மழை
    அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 7.68 சென்டி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் மேற்கு தாம்பரத்தில் 3.65 சென்டி மீட்டர் மழையும், புழலில் 2.35 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    கீழ்ப்பாக்கத்தில் சாலையில் தேங்கிய மழை நீர்

    கனமழை காரணமாக கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் அங்கு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதேபோல், மயிலாப்பூர், வடபழனி, புளியந்தோப்பு பகுதிகளில் குடியிருப்புகளுக்கு செல்லக்கூடிய சாலைகளிலும் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது.

    வடபழனியில் மழைநீரோடு சேர்த்து கழிவுநீரும் தேக்கம் 

    வடபழனி சாலைகளில் மழைநீரோடு சேர்த்து கழிவுநீரும் தேங்கியதால் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தேங்கிய மழைநீரை கைகளால் அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    திருவள்ளூரில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது

    திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை கடலோர பகுதிகளான மீஞ்சூர், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போன்று கும்மிடிபூண்டி சுற்று வட்டாரத்தில் சுமார் 2 மணிநேரம் மிதமான மழையும் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு லேசான மழையும் பெய்தது.

    மேலும் படிக்க.. புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எதன் அடிப்படையில் அவை ஏற்றப்படுகின்றன?



    மின்சாரம் துண்டிக்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

    நிவர் புயலால் மழை பெய்யும் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என அமைச்சர் தங்கமணி நேற்றே தெரிவித்திருந்தார். புயல் கரையை கடக்கும்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் அதனால் மின்வெட்டு என யாரும் நினைக்க வேண்டாம் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Cyclone Nivar, Nivar, Tamil Nadu, Tamilnadu weather man, Weather, Weather Forecast, Weather Update

    அடுத்த செய்தி