ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டேன் - நித்யானந்தா மீண்டும் சர்ச்சை

மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டேன் - நித்யானந்தா மீண்டும் சர்ச்சை

 நித்யானந்தா

நித்யானந்தா

மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தன்னை நித்யானந்தா அறிவித்துள்ள நிலையில், அவருக்கும் மடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என மடத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292 வது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த அருணகிரி நாதர் கடந்த ஆகஸ்ட் 13 அன்று இரவு உடல்நல குறைவால் காலமானார். அவருடைய உடல் நல்லடக்கம் செய்வதற்கான சடங்குகளை தருமபுரம், திருவாவடுதுறை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மடத்தின் பீடாதிபதிகள் முன்னின்று நடத்தி வைத்தனர்.

அதனை தொடர்ந்து, அருணகிரி நாதரால் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்த, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி 293 வது பீடாதிபதியாக பொறுப்பேற்று மடத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தான் பொறுப்பேற்றுக் கொண்டதாக நித்யானந்தா அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையும், புகைப்படங்களும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த 292 வது பீடாதிபதி அருணகிரிநாதருக்கு தேவையான சாஸ்திர, சம்பிரதாயங்களை தான் கைலாசாவில் இருந்து செய்து முடித்து விட்டதாகவும், ஆன்மீகம் மற்றும் மடத்தின் தர்ம ஆசாரங்களின் படி மடத்தின் அதிகாரப்பூர்வ 293 வது பீடாதிபதியாக பொறுப்பேற்று கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read : 2021 ஆண்டு, 2021 நபர்கள், 2021 நிமிடங்கள் : அபாகஸ் பயிற்சியில் மதுரை மாணவர்கள் கின்னஸ் சாதனை

அத்துடன், 2012 ஆம் ஆண்டு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், தற்போது அவர் ஆதீன மடத்தின் பீடாதிபதியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டதாக சில புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, அருணகிரிநாதர் மறைவின் போது, நித்யானந்தா வெளியிட்ட சர்ச்சை அறிக்கை குறித்து மடத்தின் 293 வது ஆதீனம் மற்றும் பிற மடாதிபதிகளிடம் கேட்ட போது, "நித்யானந்தா விவகாரம் குறித்து பேச எதுவுமில்லை" என்று பதிலளித்து முடித்துக் கொண்டனர்.

நித்தியானந்தாவின் தற்போதைய அறிக்கை குறித்து மடத்தின் நிலைப்பாட்டை வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதில்,"293 வது பீடாதிபதியாக மடத்தின் மரபுப்படியும், சட்டத்தின்படியும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொறுப்பேற்று பணிகளை தொடர்ந்து வருகிறார்.எனவே, நித்யானந்தாவால் எந்த வகையிலும் மடத்திற்கு உரிமை கோர முடியாது. அவரால் மடத்தின் பீடாதிபதியாக எந்த காலத்திலும் வர முடியாது. ஆதீன மடத்திற்கு நித்யானந்தா ஒரு பொருட்டே கிடையாது. அவர் தன்னையே சிவபெருமான் என சொல்லிக் கொள்பவர். அதற்கெல்லாம் யாராலும் பதில் சொல்ல முடியாது. அது போலத்தான் அவரது பீடாதிபதி அறிவிப்பையும் பார்க்கிறோம்.

Also Read : ‘பொய் வழக்கு போடாதே, தமிழக மக்களை வஞ்சிக்காதே’... கோஷமிட்டபடி அதிமுக வெளிநடப்பு

அவர் முகநூலில் வெறும் அறிக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான். வழக்கம் போல அவரது கேள்விக்குரிய ஒரு அறிக்கையாகவே இதுவும் இருக்கும்.நித்யானந்தா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசிக் கொண்டிருக்கிறார். நித்தியானந்தாவிற்கு இளவரசர் பட்டம் சூட்டிய அருணகிரி நாதரே, அவரை மடத்தில் இருந்து நீக்கி விட்டார்.நீதிமன்றத்திலும் அவருக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு வந்துவிட்டது.

வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்

மதுரை ஆதீன மடம் மிக தொன்மையான மரபு கொண்டது. இது நித்தியானந்தாவின் முகநூல் பதிவிற்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பாது. நாங்கள் சிவனை வணங்குவதற்காக மடத்தை நடத்துகிறோம். அவர், தன்னையே சிவனாக அறிவித்துக் கொண்டவர். எனவே, கருத்தியல் ரீதியாக கூட நித்தியானந்தாவிற்கும் மடத்திற்கும் சம்பந்தம் கிடையாது.  அருணகிரி நாதர் முக்தி அடைந்து நான்கு நாட்களாகியும் அவரால் நேரில் வந்து மரியாதை செலுத்தவில்லை. அதற்கே அவருக்கு வழியில்லை. அவர் முகநூலில் பதிவு போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published:

Tags: Nithyananda