NIRMALA SITHARAMAN ALLOCATES RS 63246 CRORES FOR CHENNAI METRO EXPANSION PROJECT IN BUDGET 2021 ARU
Budget 2021 | சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ திட்டத்தின் 2ம் கட்டமாக 118.9 கிமீ தூரத்திற்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இவை மாதவரம் - சிப்காட், லைட் ஹவுஸ் - பூந்தமல்லி மற்றும் மாதரவம் - சோழிங்கநல்லூர் என 3 கட்டமாக அமைக்கப்படுகின்றன.
சென்னையில் 118 கிமீ தூர மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோவானது டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மெட்ரோக்களுக்கு அடுத்த நிலையில் நாட்டின் 4வது மிகப்பெரிய மெட்ரோ ரயில் அமைப்பாக விளங்குகிறது.
முதல் கட்டமாக சென்னை மெட்ரோ திட்டத்தில் 45 கிமீ நீள வழித்தடத்தில் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மற்றும் சென்னை செண்ட்ரல் - தூய தோமையார் மலை ஆகிய பகுதிகளுக்கு இடையில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டத்தின் விரிவாக்கமாக 9.05 கிமீ தூரத்திலான வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான திட்டப்பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டங்களும் முடிந்துள்ளன. வரும் பிப்ரவரி 14 அன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி இத்திட்டத்தினை துவக்கி வைக்க இருக்கிறார்.
இதனிடையே சென்னை மெட்ரோ திட்டத்தின் 2ம் கட்டமாக 118.9 கிமீ தூரத்திற்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இவை மாதவரம் - சிப்காட், லைட் ஹவுஸ் - பூந்தமல்லி மற்றும் மாதரவம் - சோழிங்கநல்லூர் என 3 கட்டமாக அமைக்கப்படுகின்றன.
இத்திட்டப் பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை மெட்ரோ பணிகள் வேகமெடுக்க உள்ளன. இத்திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு சென்னையில் வாகன நெரிசல் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.